செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

சேலம் மாவட்டத்தில் சென்னை டாக்டர் உள்பட மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-05-28 07:26 GMT   |   Update On 2020-05-28 07:26 GMT
சேலம் மாவட்டத்தில் சென்னை டாக்டர் உள்பட மேலும் 2 பேர் கொரோனா பாதிப்பால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளது பொதுமக்களை கவலை அடைய செய்துள்ளது.
எடப்பாடி:

எடப்பாடி நகராட்சி எல்லைக்கு உட்பட்டது பெருமாள் கோவில் காலனி. இங்குள்ள நகராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே வசித்து வருபவர் 25 வயது கட்டிடத்தொழிலாளி,

இவருக்கு கடந்த சிலதினங்களாக, கடுமையான காய்ச்சல் மற்றும் சளி தொல்லை இருந்து வந்தது. இந்நிலையில் அவர், எடப்பாடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பதை அறிந்த அவர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்யுமாறு கூறி அனுப்பி வைத்தார்.

இதனையடுத்து எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு சென்ற கட்டிடத்தொழிலாளியின், ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவில், கட்டிடத் தொழிலாளிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேபோல் எடப்பாடி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பழைய எடப்பாடி, ஏரி ரோடு பகுதியை சேர்ந்த டாக்டர் ஒருவர், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். விடுமுறைக்காக ஊர் திரும்பிய அவருக்கு, ஓமலூர் அருகே உள்ள கருப்பூர் சோதனைச்சாவடி பகுதியில், கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அந்த டாக்டருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் சேலம் தலைமை மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்கள், வசித்த பகுதியில், எடப்பாடி நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன், சுகாதரா ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் முகாமிட்டுநோய்தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மருத்துவ அலுவலர் சண்முகவேல் தலைமையிலான மருத்துவக்குழு, நோய்த்தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதா? என பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே கொரோனா பாதித்த 48 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 69 பேர் அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது கூடுதலாக 2 பேர் கொரோனா பாதிப்பால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளது பொதுமக்களை கவலை அடைய செய்துள்ளது.
Tags:    

Similar News