செய்திகள்
ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் மாவட்ட கலெக்டர் கிரண்குராலாவிடம் மனு கொடுத்த காட்சி

புதிய அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் - கலெக்டரிடம் எம்.எல்.ஏ. மனு

Published On 2020-05-27 16:15 GMT   |   Update On 2020-05-27 16:15 GMT
வெள்ளாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என கலெக்டரிடம் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மனு கொடுத்துள்ளார்.
திருக்கோவிலூர்:

ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலாவிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

சேலம் மாவட்டத்தில் உள்ள கைகான் வளைவு பகுதியில் ரூ.7½ கோடி மதிப்பில் புதிய அணைக்கட்டுடன் கூடிய கால்வாய் அமைக்கும் பணியை தமிழக அரசு தொடங்க உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையிலும் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அப்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக முகாமிட்டு, மக்களை சந்தித்து திட்டம் பற்றி விளக்கி கூறி நிலத்தை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.

கைகான் வளைவின் வழியே வரும் வெள்ளாறு, கல்வராயன்மலையின் மேல்பகுதியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆரம்பூண்டியில் உற்பத்தியாகி வாழபூண்டி உள்ளிட்ட கிராமங்களை தாண்டி சேலம் மாவட்டத்தில் கைகான் வளைவு, கருமந்துறை வழியாக மீண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டம் வெள்ளிமலை, கரியாலூர். மணியார்குண்டம், பரிகம் என 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை தாண்டி மலைஅடிவாரத்தில் உள்ள கோமுகி அணையை வந்தடைகிறது.

இந்த வெள்ளாற்றின் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. எனவே இந்த திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News