செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 22 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

Published On 2020-05-27 15:34 GMT   |   Update On 2020-05-27 15:34 GMT
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கோவில்பட்டி, கயத்தாறு மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 22 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
தூத்துக்குடி:

மும்பை, குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் பணியாற்றி வரும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பலர் தனியார் வாகனங்கள் மூலம் தூத்துக்குடிக்கு திரும்பி வந்து கொண்டு இருக்கின்றனர். இவர்கள் மாவட்ட எல்லைகளில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அவர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் வரை 177 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 54 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர். 2 பேர் பரிதாபமாக இறந்து விட்டனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கோவில்பட்டி, கயத்தாறு மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 22 பேர் குணமடைந்து உள்ளனர். அவர்கள் நேற்று வீடு திரும்பினர். அவர்களுக்கு டாக்டர்கள் பழங்கள் வழங்கினர்.

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, டீன் ரேவதி, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி மற்றும் டாக்டர்கள் கைதட்டி வழியனுப்பி வைத்தனர். அவர்கள் 14 நாட்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்து உள்ளது.

Tags:    

Similar News