செய்திகள்
தூத்துக்குடி வணிகவரி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் 28 இடங்களில் ஆர்ப்பாட்டம்

Published On 2020-05-27 15:26 GMT   |   Update On 2020-05-27 15:26 GMT
இலவச மின்சாரத்தை நிறுத்த முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் 28 இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி:

விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை நிறுத்த மத்திய அரசு முயற்சிப்பதாகவும், மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று வலியுறுத்தியும் தூத்துக்குடி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் தூத்துக்குடி மாவட்ட வணிகவரித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். மாநில மீனவர் அணி பொதுச்செயலாளர் ரொனால்டு வில்லவராயர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சாயர்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, 18 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஓட்டப்பிடாரம் துணை மின்நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வட்டார தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் பேரையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து கோவில்பட்டி ஸ்டேட் வங்கி முன்பு ஐ.என்.டி.யூ.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி மின்சார வாரிய அலுவலகம் முன்பு வடக்கு மாவட்ட பொருளாளர் கேசவன் தலைமையிலும், தலைமை தபால் நிலையம் முன்பு மாநில காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு துணைத்தலைவர் மாரிமுத்து தலைமையிலும், நகராட்சி அலுவலகம் முன்பு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வீரபெருமாள் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

எட்டயபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். கோவில்பட்டியில் நடந்த போராட்டத்திலும் அவர் பங்கேற்றார். சாத்தான்குளத்தில் தபால் அலுவலகம் முன்பு வட்டார தலைவர் ஜனார்த்தனன் தலைமையிலும், சாத்தான்குளம் ஸ்டேட் வங்கி முன்பு நகர தலைவர் வக்கீல் வேணுகோபால் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் வட்டார தலைவர் லூர்துமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். 144 தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

உடன்குடி கிறிஸ்தியாநகரம் தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு உடன்குடி வட்டார தலைவர் துரைராஜ் ஜோசப் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், சமூக இடைவெளியை கடைபிடித்ததுடன் கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர்.

திருச்செந்தூர் தொலை தொடர்பு துறை அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட விவசாய பிரிவு தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

சாத்தான்குளம் ஸ்டேட் வங்கி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் வேணுகோபால் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் சுதாகர், குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். தடையை மீறி ஆர்பாட்டம் நடத்தியதாக சுதாகர், குருசாமி, வேணுகோபால் உள்பட 7 பேரை சாத்தான்குளம் போலீசார் கைது செய்தனர்.

கடம்பூர் சென்ட்ரல் வங்கி முன்பு மாவட்ட துணை செயலாளர் வக்கீல் அய்யலுசாமி தலைமையில் கட்சியினர் கையில் பழைய கஞ்சி மற்றும் ஊறுகாயுடன் பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய தலைவர் செல்லத்துரை, ஒன்றிய துணை தலைவர் கருப்பசாமி உள்பட 3 பேரை கடம்பூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை விடுவித்தனர்.

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் தெற்கு மண்டல அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மண்டல காங்கிரஸ் துணை தலைவர் சண்முக சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 28 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 4 இடங்களில் உரிய அனுமதி பெறாமல் நடத்தப்பட்டதால், மொத்தம் 36 பேர் கைது செய்யப்பட்டனர். 
Tags:    

Similar News