செய்திகள்
விடைத்தாள் திருத்தும் மையங்களின் நுழைவாயிலில் ஆசிரியர்களுக்கு கை கழுவும் திரவம் வழங்கப்பட்டது.

கோவை, திருப்பூர், நீலகிரியில் முகக்கவசம் அணிந்து பிளஸ்-2 விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள்

Published On 2020-05-27 12:16 GMT   |   Update On 2020-05-27 12:16 GMT
கோவை, திருப்பூர், நீலகிரியில் முகக்கவசம் அணிந்து பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். அனைத்து ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு நுழைவாயிலில் கை கழுவும் திரவம் வழங்கப்பட்டது.
கோவை:

கோவை மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. கோவை கல்வி மாவட்டத்தில் 5 மையங்களிலும், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 4 மையங்களிலும், எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்டத்தில் 2 மையங்கள் என மொத்தம் 11 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடந்தது.

இந்த பணியில் 375 முதன்மை தேர்வாளர்கள், 375 கூர்ந்தாய்வு அலுவலர்கள், 2,250 உதவித் தேர்வாளர்கள் மற்றும் 200 அலுவலக பணியாளர்கள் என மொத்தம் 3,200 ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர் ஈடுபட்டனர்.

மேலும் விடைத்தாள் திருத்தும் மையங்களில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையின் பொருட்டு அனைத்து வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகங்கள் சுத்தம் செய்யப்பட்டு, கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு, பிளீச்சிங் பவுடர், சானிடைசர் மூலம் கழிவறைகள் சுத்தம் செய்யப்பட்டது.

விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு வந்த அனைத்து ஆசிரியர்கள், பணியாளர்கள் முகக்கவசங்கள் அணிந்தபடி வந்தனர். அவர்களுக்கு நுழைவாயிலில் கை கழுவும் திரவம் வழங்கப்பட்டது.

ஒரு வகுப்பறைக்கு ஒரு முதன்மைத்தேர்வாளர், ஒரு கூர்ந்தாய்வு அலுவலர் மற்றும் 6 உதவித் தேர்வாளர்கள் என 8 பேர் கொண்ட ஒரு குழு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஆசிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்கினர்.

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் கோவை மாவட்டத்தை சேர்ந்த 1,650 ஆசிரியர்கள் எவ்வித சிரமமின்றி மையங்களுக்கு சென்று பணியை மேற்கொள்வதற்கு ஏதுவாக 44 வழித்தடங்களில் 74 பஸ்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆசிரியர்களை ஒருங்கிணைக்க பஸ்களுக்கு தலா ஒருவர் வீதம் 74 ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

அனைத்து விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு தலா 2 போலீசார் வீதம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் 5 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. இந்த பணியில் முதன்மை தேர்வாளர்கள் 200 பேர், கூர்ந்தாய்வு அலுவலர்கள் 200 பேர், உதவி தேர்வாளர்கள் 1200 பேர் மற்றும் 87 அலுவலக பணியாளர்ஆகியோர் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி 2 மையங்களில் நடந்தது. விடைத்தாள் திருத்தும் பணியில் 400 ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News