செய்திகள்
தண்டையார்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட வசந்தகுமார் எம்.பி.

இலவச மின்சாரத்தை ரத்து செய்வதா?- தமிழகம் முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Published On 2020-05-26 08:20 GMT   |   Update On 2020-05-26 08:20 GMT
மத்திய அரசின் சட்டத்திருத்தத்தால், தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ரத்தாகிவிடும் என்று கூறி தமிழகம் முழுவதும் காங்கிரசார் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை:

மத்திய அரசு மின்சார சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இதனால் தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் திட்டம் ரத்தாகி ஆகிவிடும் என்று அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த சட்டத்திருத்தத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அனைத்து மாவட்டங்களிலும் மத்திய-மாநில அரசு அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார்.



அதன்படி இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை அண்ணாநகரில் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பீட்டர் அல்போன்ஸ், மாவட்ட தலைவர் வீரபாண்டியன், வில்லிவாக்கம் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சத்தியமூர்த்தி பவன் அருகில் நடந்த போராட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கோபண்ணா, மாவட்ட தலைவர் சிவராஜசேகரன், வி.ஆர்.சிவராமன், ரங்கபாஷ்யம், நாஞ்சில் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தண்டையார்பேட்டை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் வசந்தகுமார் எம்.பி., மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம், உ.பலராமன், சிரஞ்சீவி, வி.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு முத்தழகன், இல.பாஸ்கரன் ஆகியோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அண்ணா ரோடு தலைமை தபால் நிலையம் அருகே முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் அதிகபட்சம் 5 பேர் பங்கேற்றனர். முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளி விட்டும், கையில் கருப்புக்கொடி பிடித்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News