செய்திகள்
குழந்தை சுபஸ்ரீ

தொட்டிலில் இருந்த குழந்தையை வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தூக்கி வீசிய சூறைக்காற்று

Published On 2020-05-26 06:27 GMT   |   Update On 2020-05-26 06:27 GMT
வாழப்பாடியில் தொட்டிலில் இருந்த குழந்தையை வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் சூறைக்காற்று தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாழப்பாடி:

வாழப்பாடி பகுதியில் நேற்று முன்தினம் மாலை பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது பலத்த காற்றுக்கு வாழப்பாடி அக்ரஹாரம் கணபதி கவுண்டர் தெருவை சேர்ந்த இளையராஜா, முருகன், செந்தில் ஆகியோரது வீடுகளின் மேற்கூரைகள் மேலே பறந்து விழுந்து சேதமடைந்தன.

இதில் இளையராஜா என்பவருடைய 1 வயது பெண் குழந்தை சுபஸ்ரீயை மேற்கூரையில் இரும்பு சட்டத்தில் தொட்டில் கட்டி தூங்க வைத்திருந்தனர். இந்தநிலையில் அப்பகுதியில் வீசிய சூறைக்காற்றுக்கு மேற்கூரை அடியோடு பெயர்ந்து மேலே பறந்து 100 அடி தூரத்தில் உள்ள சோளக்காட்டில் விழுந்தது. இதில் மேற்கூரையோடு தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த குழந்தையும் பறந்து சோளக்காட்டில் விழுந்தது.

வீட்டில் குழந்தையை காணாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து பல இடங்களில் தேடினர். அப்போது சோளக்காட்டில் கிடந்த மேற்கூரையை புரட்டி பார்த்தபோது, மேற்கூரை அழுத்தியதில் அழுகை சத்தம் கூட வெளியில் வராமல் குழந்தை திணறி கொண்டிருந்ததை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து குழந்தையை மீட்டனர்.

அதிர்ஷ்டவசமாக குழந்தை எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பியது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அந்த குழந்தையை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
Tags:    

Similar News