செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

திருச்சியில் அரசு அதிகாரி குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா

Published On 2020-05-25 07:35 GMT   |   Update On 2020-05-25 07:35 GMT
திருச்சியில், அரசு அதிகாரி குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா உறுதியானது. தாமாக முன்வந்து பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது தெரிய வந்தது.
திருச்சி:

சென்னையில் இருந்து திருச்சி மாவட்டத்துக்கு வந்த 282 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 278 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. மீதமுள்ள 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதில், திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்த அரசு அதிகாரி ஒருவரின் தாய், தந்தைக்கு கொரோனா தொற்று இருந்ததால் அந்த அதிகாரி , அவரது மனைவி மற்றும் மகன் ஆகிய 3 பேரும் அச்சம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து இவர்கள் 3 பேரும் தாமாக முன்வந்து அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இதில் தொற்று உறுதியானதையடுத்து 3 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதுவரை திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி 75 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 66 பேர் குணம் அடைந்து அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 9 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும், ரெயில்வேயில் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் ஒரு நபரும், தேனி மாவட்டத்தை சேர்ந்த ஒரு நபரும் என 16 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தநிலையில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், திருச்சி மாவட்டத்தை கொரோனா வைரஸ் நோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வேண்டுகோள் விடுத்துள்ளார். 
Tags:    

Similar News