செய்திகள்
ஒகேனக்கல்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3,500 கனஅடியாக குறைந்தது

Published On 2020-05-23 13:41 GMT   |   Update On 2020-05-23 13:41 GMT
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 3,500 கனஅடியாக குறைந்தது.
பென்னாகரம்:

கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அருவிக்கு செல்லும் நடைபாதையின் நுழைவுவாயில் சுற்றுலா பயணிகள் செல்லாத வகையில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் பஸ் நிலையம், பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த 20-ந்தேதி வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் வறண்டு கிடந்த காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறையத் தொடங்கியது. நேற்று முன்தினம் வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்தநிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,500 கனஅடியாக குறைந்தது. தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

காவிரி ஆற்றில் நீர்வரும் காலங்களில் சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, காவிரி கரையோரம் குளித்து மகிழ்வார்கள். மேலும் பரிசலிலும் செல்வார்கள். தற்போது ஊரடங்கு உத்தரவால் சுற்றுலா தலமான ஒகேனக்கல் மெயின் அருவி பகுதி சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Tags:    

Similar News