செய்திகள்
பெரியார் பஸ் நிலையம்

பெரியார் பஸ் நிலைய கட்டுமான பணிகள் மீண்டும் தொடக்கம்

Published On 2020-05-23 12:26 GMT   |   Update On 2020-05-23 12:26 GMT
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கட்டுமான பணிகள் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பெரியார் பஸ் நிலையப் பணிகள் மீண்டும் தொடங்கி உள்ளது.
மதுரை:

மதுரை நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பஸ் நிலையம், வைகை கரை சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் ரூ.1,100 கோடி செலவில் கடந்த ஆண்டு தொடங்கியது.

பெரியார் பஸ் நிலையம் பகுதியில் ரூ.150 கோடி செலவில் நவீன பஸ் நிலையம் மற்றும் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

பெரியார் பஸ் நிலையப் பகுதியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் சில மாதங்களுக்கு முன்பு மந்தமான நிலையில் நடந்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து கூடுதல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வேகப்படுத்தப்பட்டது.

மேலும் பெரியார் பஸ் நிலையப் பணிகள் ஏப்ரல் மாதத்தில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் ஸ்மார்ட் சிட்டி பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் பெரியார் பஸ் நிலையப் பகுதியில் நடந்து வந்த பணிகளும் முடங்கின. திட்டமிட்டப்படி பணிகள் நிறைவு பெறவில்லை.

தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கட்டுமான பணிகள் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பெரியார் பஸ் நிலையப் பணிகள் மீண்டும் தொடங்கி உள்ளது.

மாநகராடசி கமி‌ஷனர் விசாகன் உள்ளிட்ட அதிகாரிகள் பஸ் நிலைய பணியினை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். கடந்த 2 மாதம் கொரோனாவால் பணிகள் தடைப்பட்ட நிலையில் மீண்டும் பணிகள் முழு வீச்சில் நடைபெற தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று ஒப்பந்தக்காரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் இரவு-பகலாக பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு வருகிறது. வருகிற ஜூலை மாத இறுதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர். எனவே பஸ் நிலையப் பகுதியில் பணிகள் மீண்டும் வேகப்படுத்தப்பட்டுள்ளதால், திட்டமிட்டபடி பணிகள் முடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2 மாதமாக பணிகள் நடைபெறாததால், பெரியார் பஸ் நிலைய பகுதியில் தூசு பரவாமல் இருந்தது. தற்போது பணிகள் தொடங்கியுள்ளதால் அந்த பகுதியில் மீண்டும் தூசு படலம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமமும் ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News