செய்திகள்
மு.க.ஸ்டாலின்

பிரதமர் நரேந்திரமோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

Published On 2020-05-22 04:09 GMT   |   Update On 2020-05-22 04:09 GMT
பத்திரிகைகள் சந்தித்து வரும் கடும் நெடுக்கடி நிலை குறித்து பிரதமர் நரேந்திரமோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பத்திரிகை நிறுவனங்களின் நிதி சுமையை குறைக்க சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் நிலையில், அச்சு ஊடகங்களான நாளிதழ்கள் உள்ளிட்ட பத்திரிகைகள் சந்தித்து வரும் கடும் நெருக்கடிகள் குறித்து பத்திரிகையாளர்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

இத்தகைய நெருக்கடியான நேரங்களில், தக்க நேரத்தில் சரியான தகவல்கள் குடிமக்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய அரசும், ஊடகங்களும் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியமாகும். இதில் தவறு நேர்ந்தால் அது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை விளைவிப்பதோடு, அதுவும் தற்போதையச் சூழலில், இதுநாள் வரையிலான ஊரடங்கின் பயனையும் ஒன்றுமற்றதாக்கி விடக்கூடும்.

கடந்த 2 மாத காலமாக பொருளாதாரம் முடங்கியுள்ள சூழ்நிலையில், செய்தித்தாள் நிறுவனங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அதன் வாழ்வாதாரத்தையே கேள்விக்குரியதாக்கிவிட்டது. விளம்பர வருவாய் இழப்பு மற்றும் கோவிட்-19 தொற்று காரணமாக விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாகச் செலவினங்களை ஈடு செய்ய முடியாதது இந்தத் துறைக்குக் கடுமையான அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

தக்க உதவிகள் வழங்கப்படாவிடில், இத்துறையில் பணியாற்றும் 30 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடிய ஆபத்து இருப்பது என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. ஊரடங்கு காலத்தில் பக்கங்களைக் குறைத்தல், பணியாளர்களை பணிநீக்கம் செய்தல் மற்றும் பதிப்புகளைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும் கூட, நிறுவனங்களின் பிரச்சனைகளுக்கு இப்போது தீர்வுகாணப்படாவிடில், செய்தித்தாள்கள் தொடர்ந்து செயல்பட மேலும் பல கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதாகிவிடும்.

பல்வேறு செய்தித்தாள் நிறுவனங்களின் தலைமையோடு நான் கலந்துரையாடியபோது பல்வேறு பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டன. அதனடிப்படையில், தங்களது உடனடி நடவடிக்கைக்காக கீழ்காணும் முக்கியப் பரிந்துரைகளை முன்வைக்கிறேன்.

* செய்தித்தாள் நிறுவனங்களின் சேவை எவ்விதத் தடையுமின்றித் தொடர, அவர்களது நிதிச் சுமையைக் குறைக்கும் உடனடிச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

* செய்தித்தாள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் பிற மூலப்பொருட்களுக்கான சுங்க வரி ஆண்டு முழுவதும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

* பல ஆண்டுகளாக பி.ஓ.சி. கணிசமான தொகையை செய்தித்தாள் நிறுவனங்களுக்கு நிலுவை வைத்துள்ளது. அவை உடனடியாக வழங்கப்பட்டால், சமூக விலகல் உள்ளிட்ட நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கப்படுவதால் உயர்ந்துள்ள செயல்முறைச் செலவுகளை ஈடுசெய்ய முடியும்.

* தனியாரிடம் இருந்து வரும் விளம்பர வருவாயில் ஏற்பட்டுள்ள இழப்பினை ஈடுசெய்ய, அவசியத் தகவல்களை வெளியிட பி.ஓ.சி.யால் வழங்கப்படும் விளம்பரக் கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட வேண்டும்.

* அதேசமயம், நமது செய்தித்தாள் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் அரசின் அறிவிப்புகளை வெளியிட அச்சு ஊடகங்களின் பயன்பாட்டை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

இப்பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்பட்டு, நெருக்கடியான இச்சமயத்தில், செய்தித்தாள் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்குச் சரியான நேரத்தில் உதவிகள் கிடைத்திடும் என்னும் நம்பிக்கையில் தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Tags:    

Similar News