செய்திகள்
கலெக்டர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம்

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனை கூட்டம்

Published On 2020-05-21 16:52 GMT   |   Update On 2020-05-21 16:52 GMT
தென்காசியில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை கூட்டம், கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தாசில்தார், பொதுப்பணித்துறை பொறியாளர்கள், உள்ளாட்சி அலுவலர்கள் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள குளங்கள், கால்வாய்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அவற்றில் ஏதேனும் விரிசல், உடைப்பு, மதகு பழுது இருந்தால் அதனை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய தேவையான காலி சாக்கு, மணல் போன்ற பொருட்களை முன்கூட்டியே சேகரித்து வைக்க வேண்டும். வெள்ள அபாய எச்சரிக்கையின்போது ஆறுகள், குளங்கள் மற்றும் கால்வாய்களில் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களை கண்டறிந்து அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அல்லது நிவாரண மையங்களுக்கு செல்ல அறிவுறுத்த வேண்டும். நிவாரண மையங்கள் அமைக்க ஏதுவாக உள்ள பள்ளிக்கூட கட்டிடங்கள், சமுதாயக்கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்களை முன்னதாகவே ஆய்வு செய்து மின்வசதி, குடிநீர் வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தீயணைப்பு துறை வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களை தயார் நிலையில் வைத்தல், ஒவ்வொரு வாகனங்களையும் பழுது நீக்கி தேவையான பேட்டரி, ஜெனரேட்டர் மற்றும் கைவிளக்கு ஆகியவற்றை சரிசெய்து நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து நீரேற்று நிலையங்களிலும், மேல்நிலை குடிநீர் தொட்டிகளிலும் குடிநீரில் போதுமான அளவு குளோரின் கலப்பதை கண்காணிக்க வேண்டும்.

மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதற்கு வாய்ப்புள்ள தேங்காய் சிரட்டை, காகிதம், பிளாஸ்டிக் டம்ளர்கள், மின்வயர்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்த வேண்டும். இதன்மூலம் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முடியும். தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக பாதிப்படையும் பகுதிகளில் தங்கி இருக்கும் பொதுமக்களுக்கு சிறப்பு நிவாரண முகாம்கள் ஏற்படுத்தும்போது அங்கு போதுமான அளவுக்கு சமூக இடைவெளி விட்டு பொதுமக்களை தங்க வைக்க வேண்டும். சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ள அனைத்து வகையான உள்கட்டமைப்பு வசதிகளையும் தயார்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், வருவாய் அலுவலர் கல்பனா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மரகதநாதன், உதவி கலெக்டர்கள் பழனிகுமார் (தென்காசி), முருகசெல்வி (சங்கரன்கோவில்) உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News