செய்திகள்
கார் தீப்பற்றி எரிவதை படத்தில் காணலாம்.

நாமக்கல்லில் கியாஸ் நிரப்பிய சில நொடிகளில் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

Published On 2020-05-20 15:04 GMT   |   Update On 2020-05-20 15:04 GMT
நாமக்கல்லில் கியாஸ் நிரப்பிய சில நொடிகளில் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள பேட்டப்பாளையத்தை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 39), துணி வியாபாரி. இவர் மோகனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தனது சொந்த கார் மூலம் துணி விற்பனை செய்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று நாமக்கல்லை அடுத்த முதலைப்பட்டியில் உள்ள கியாஸ் நிரப்பும் பங்கில் காருக்கு எரிவாயு நிரப்புவதற்காக மோகனூரில் இருந்து வந்தார். பங்கில் கியாஸ் நிரப்பிவிட்டு காரை அங்கிருந்து நகர்த்திய சில நொடிகளிலேயே காரின் பின் பகுதியில் திடீரென தீப்பற்ற தொடங்கி உள்ளது. இதைக் கண்ட சரவணகுமார் உடனடியாக காரை பங்கில் இருந்து வெளியே நகர்த்தி நிறுத்திவிட்டு கீழே இறங்கி உள்ளார்.

இதைத்தொடர்ந்து ‘பங்க்’ ஊழியர்கள் நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் காரில் ஏற்பட்ட தீயை வேகமாக அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் தீ மளமளவென கார் முழுவதும் பரவி முற்றிலும் சேதம் அடைந்தது. மேலும் காரில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள துணிகளும் தீயில் முற்றிலுமாக எரிந்தன. இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து தகவல் அறிந்த நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் சரவணகுமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டரில் ஏற்பட்ட கியாஸ் கசிவே இந்த விபத்திற்கு காரணம் என்பது தெரியவந்து உள்ளது. இருப்பினும் டிரைவரின் சாதுர்யத்தால் கியாஸ் நிரப்பும் ‘பங்க்’ இந்த தீ விபத்தில் இருந்து தப்பித்ததோடு பெரிய விபத்தும் தவிர்க்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News