செய்திகள்
சலூன்

அனைத்து இடங்களிலும் சலூன்கள் திறக்கப்படுமா?- தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

Published On 2020-05-20 08:09 GMT   |   Update On 2020-05-20 10:51 GMT
அனைத்து இடங்களிலும் சலூன்கள் திறக்கப்படுவது தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் முடித்திருத்தும் நிலையங்கள், அழகு நிலையங்களை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. 

அதன்பின்னர் முடி திருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர ஏனைய ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் இயங்க அனுமதி அளித்துள்ளது.

இதற்கிடையே தமிழகத்தில் முடித்தும் நிலையங்கள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கக் கோரி முடித்திருத்துவோர் நலச்சங்க தலைவர் முனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர மற்ற ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும், அனைத்து பகுதிகளிலும் திறப்பது தொடர்பாக, படிப்படியாக அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழக அரசு வரும் 28ம் தேதி விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.
Tags:    

Similar News