செய்திகள்
எம்ஜிஆர் காய்கறி மார்க்கெட்டில் லாரிகளில் அதிக அளவில் வந்துள்ள வெங்காய மூட்டைகள்.

கோவைக்கு பெரியவெங்காயம் வரத்து அதிகரிப்பு

Published On 2020-05-18 13:56 GMT   |   Update On 2020-05-18 13:56 GMT
சென்னை கோயம்பேடு மூடப்பட்டுள்ளதால் கோவைக்கு பெரிய வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 800 டன் பெரிய வெங்காயம் கொண்டு வரப்பட்டன.
கோவை:

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனியில் நீலகிரி மாவட்டத்துக்கு செல்லும் பஸ் நிலையம் உள்ளது. அந்த பஸ் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். மொத்த காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.

இந்த மார்க்கெட்டுக்கு நேற்று ஒரே நாளில் 40 லாரிகளில் சுமார் 800 டன் பெரிய வெங்காயம் கோவைக்கு கொண்டு வரப்பட்டது. அவை சிறிய லாரிகளில் ஏற்றப்பட்டு கோவையில் உள்ள மற்ற காய்கறி கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதுகுறித்து எம்.ஜி.ஆர். மார்க்கெட் வியாபாரிகள் சிலர் கூறியதாவது:-

கோவையில் உள்ள எம்.ஜி.ஆர். மொத்த மார்க்கெட்டுக்கு மராட்டியம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் பெரிய வெங்காயம் லாரிகளில் கொண்டு வரப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக அதிக அளவில் பெரிய வெங்காயம் கொண்டு வரப்படுகிறது.

இதற்கு காரணம் பெரிய வெங்காயம் அதிகம் சாகுபடி செய்யப்படும் மராட்டியத்தில் கொரோனா தொற்று காரணமாக மார்க்கெட்டுகளுக்கு பெரிய வெங்காயம் கொண்டு செல்லவில்லை. மேலும் சென்னையில் உள்ள கோயம்பேடு தற்போது மூடப்பட்டுள்ளதால் அங்கு கொண்டு செல்ல வேண்டிய பெரிய வெங்காயம் முழுவதும் கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இதன் காரணமாக கோவைக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. மராட்டியத்தில் பெரிய வெங்காயம் விற்க முடியாததால் அங்கு சாகுபடி செய்யப்படும் பெரிய வெங்காயம் முழுவதும் இங்கு கொண்டு வரப்படுவதாலும் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் நேற்று ஒரே நாளில் 40 லாரிகளில் சுமார் 800 டன் பெரிய வெங்காயம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் மொத்த விலைக்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.10-க்கு விற்றது. கோவைக்கு பெரிய வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது.

இந்த நிலை மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது தான். கோவையில் இருந்து கேரளாவுக்கு தினமும் 100 டன் வரை பெரிய வெங்காயம் அனுப்பி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News