செய்திகள்
மேட்டூர் அணை

ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறப்பு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Published On 2020-05-18 08:25 GMT   |   Update On 2020-05-18 10:36 GMT
மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி பாசனத்திற்காக திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை:

மேட்டூர் அணையை ஜூன் 12-ந்தேதி திறப்பது குறித்து காவிரி டெல்டா மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்கு பின் மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி காலை 10 மணிக்கு பாசனத்திற்காக திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100.01 அடியாகவும், நீர் இருப்பு 64.85 டிஎம்சியாகவும் இருப்பதால் குறுவை நெல் சாகுபடிக்காக காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படுகிறது.

மேட்டூர் அணை திறப்பால் நடப்பாண்டில் 3.25 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, சுமார் 5.60 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் எதிர்பார்க்கப்படுகிறது.

பயிர்க்கடன் வசதி பெறுவதற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வட்டியில்லாக் கடன் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

மேலும் தற்போது நிலவிவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, விவசாய பெருமக்களும், வேளாண் தொழிலாளர்களும் முக கவசம் அணிந்து, பரிந்துரைக்கப்பட்ட சமூக இடைவெளியினை பின்பற்றி சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
Tags:    

Similar News