செய்திகள்
வாலிபர் கொலை

ஆத்தூர் அருகே வாலிபர் குத்திக்கொலை

Published On 2020-05-17 08:05 GMT   |   Update On 2020-05-17 08:05 GMT
ஆத்தூர் அருகே வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆறுமுகநேரி:

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரை அடுத்த முக்காணி காந்திநகரை சேர்ந்தவர் திருமணி. இவரது மகன்கள் சேர்மத்துரை(வயது28), ராஜதுரை(25). ராஜதுரை தனது ஊரில் வல்கனைசிங் கடை நடத்தி வந்தார்.

நேற்று இரவு ராஜதுரை, அவரது அண்ணன் சேர்மதுரை, வடக்கு ஆத்தூரை சேர்ந்த முத்துசெல்வகுமார் (25) ஆகிய 3 பேரும் காந்தி நகர் பிள்ளையார் கோவில் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

அங்கு முக்காணி அம்பேத்கார் நகரை சேர்ந்த மணிகண்டன், புல்லாவெளி அதிபன், பழையகாயல் அருகே உள்ள சர்வோதயபதி சுபாஷ் உள்ளிட்ட 9 பேர் வந்தனர். அவர்களை சேர்மதுரை உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மணி கண்டன் உள்ளிட்டோர் ராஜதுரை, சேர்மதுரை, முத்துசெல்வக்குமார் ஆகிய 3 பேரையும் கத்தியால் குத்தி விட்டு தப்பிஓடி விட்டனர்.

காயமடைந்த 3 பேரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜதுரை இறந்தார். மற்ற 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கொலைக்கான காரணம் குறித்த தகவல் தெரியவந்தது.

கொலையாளிகளில் ஒருவரான மணிகண்டன் முக்காணி பகுதியில் இறைச்சிகடை நடத்தி வருகிறார். ஆடு திருட்டு சம்பவம் தொடர்பாக அவரிடம் காந்திநகரை சேர்ந்த பட்டுராஜ் என்பவர் கேட்டுள்ளார். அதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

அதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இருவரையும் சமரசம் செய்தனர். போலீசில் புகார் செய்ததால் பட்டுராஜ் மீது மணிகண்டனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அவர் தனது நண்பர்களுடன் பட்டுராஜிடம் கேட்க சென்றுள்ளனர். அப்போதுதான் ராஜதுரை உள்ளிட்டோர் அவர்களை வழிமறித்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்தது.

இந்த கொலை தொடர்பாக மணிகண்டன், அதிபன், சுபாஷ் உள்ளிட்ட 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News