செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மையம்

வடதமிழகத்தில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு- வானிலை மையம்

Published On 2020-05-16 10:20 GMT   |   Update On 2020-05-16 10:20 GMT
வடதமிழகத்தில் இன்று முதல் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே இடத்தில் வலுப்பெற்றுள்ளது. இன்று மாலையோ அல்லது இரவோ விரைவாக வலுப்பெற்று புயலாக மாறக்கூடும். 

மேலும் இது நாளை மாலைக்குள் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். இது 17ம் தேதி வரை வடக்கு -வடமேற்கு திசையிலும், 18ம் தேதி முதல் வடக்கு- வட கிழக்கு திசையிலும் நகரக்கூடும்.

இதன் காரணமாக வங்கக் கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசும் என்பதால் 20 தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

வடதமிழகத்தில் இன்று முதல் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். சென்னையைப் பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசையும் ஒட்டி இருக்கும். 

இன்று தமிழகத்தில் திருச்சியில் அதிகபட்சமாக 40.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. சென்னையில் 37.2 டிகிரி செல்சியஸ், அதிராமபட்டினத்தில் 37.3 டிகிரி செல்சியஸ், கோவையில் 36.6 டிகிரி செல்சியஸ், மதுரையில் 39 டிகிரி செல்சியஸ், கடலூரில் 37 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 39 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் 40 டிகிரி செல்சியஸ், வேலூரில் 38.8 டிகிரி செல்சியஸ்  வெப்பநிலை பதிவாகி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் வேடசந்தூரில் அதிகபட்சமாக 5 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், வாடிப்பட்டியில் தலா 4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
Tags:    

Similar News