செய்திகள்
செயின் பறிப்பு

ஜோலார்பேட்டை அருகே முன்னாள் ராணுவ வீரர் மனைவியிடம் 7 பவுன் செயின் பறிப்பு

Published On 2020-05-15 17:37 GMT   |   Update On 2020-05-15 17:37 GMT
ஜோலார்பேட்டை அருகே பட்டப்பகலில் முன்னாள் ராணுவ வீரர் மனைவியிடம் 7 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பி சென்ற 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டையை அடுத்த சின்னமூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவன். முன்னாள் ராணுவ வீரர். தற்போது கர்நாடக மாநிலத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுகந்தி (வயது 35). இவர் நேற்று காலை திருப்பத்தூர் பகுதியில் உள்ள வங்கிக்கு மொபட்டில் சென்றார். பின்னர் அவர் வங்கியில் இருந்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.

தாமலேரி முத்தூர் மேம்பாலம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் தனது மொபட்டுக்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டு சாலையை கடந்தார். அப்போது ஜோலார்பேட்டை பகுதியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி 3 பேர் முகமூடி அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் வந்தனவ். அவர்கள் திடீரென்று சுகந்தி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிச்செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் திருப்பத்தூர் நோக்கி வேகமாக சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சுகந்தி திருடன் திருடன் என கூச்சலிட்டார். ஆனால் மர்ம நபர்கள் தப்பிச்சென்றுவிட்டனர். பின்னர் இதுகுறித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் சுகந்தி தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் ஆங்காங்கே போலீசாருக்கு தகவல் தெரிவித்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடினர். அப்போது குரிசிலாப்பட்டு போலீசார் கல்லுக்குட்டை புதூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரை சுற்றி வளைத்தனர். இதில் 2 பேர் மட்டும் பிடிபட்டனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

பிடிபட்ட 2 பேரையும் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இது குறித்து சுகந்தி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பிடிபட்ட 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News