செய்திகள்
பாஜக

தமிழர்கள் திரும்ப முடியாமல் தவிப்பு- அனுமதி வழங்க பா.ஜனதா வேண்டுகோள்

Published On 2020-05-14 11:37 GMT   |   Update On 2020-05-14 11:37 GMT
தமிழர்களை மீட்க விமானம் மற்றும் கப்பல் சேவைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பா.ஜனதா பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
சென்னை:

கொரோனா பாதிப்பால் வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை தாயகத்துக்கு அழைத்து வர 149 விமானங்கள் மற்றும் 3 கப்பல்களை மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி அமெரிக்காவில் இருந்து 13, ஐக்கிய அரபுநாட்டில் இருந்து 11, கனடாவில் இருந்து 10, சவுதி மற்றும் இங்கிலாந்தில் இருந்து தலா 9, மலேசியா, ஓமனில் இருந்து தலா 8, கஜகஸ்தான், ஆஸ்திரேலியாவில் இருந்து தலா 7, உக்ரைன், கத்தார், இந்தோனேசியா, ரஷியா ஆகிய நாடுகளில் இருந்து தலா 6, பிலிப்பைன்சில் இருந்து 5, பிரான்ஸ், சிங்கப்பூர், அயர்லாந்து, கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து தலா 4 விமானங்கள் மற்றும் குவைத், ஜப்பான், ஜெர்மனி, பக்ரைன், அர்மீனியா, தாய்லாந்து, இத்தாலி, நைஜீரியா உள்பட பலநாடுகளில் இருந்து இந்த விமானங்கள் இயக்கப்படுகிறது.

இந்த விமானங்கள் அனைத்தும் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, பீகார், மத்தியபிரதேசம், ஒடிசா, கர்நாடகா, குஜராத், டெல்லி, பஞ்சாப், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் இயக்கப்படுகிறது.

இதில் ஒரு விமானம் கூட தமிழகம் வரும் பட்டியலில் இல்லை. மற்ற மாநிலங்களை போலவே தமிழர்களும் அதிக அளவில் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். அவர்களும் தமிழகம் திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள்.

அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் அந்த அந்த மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டும் வர அனுமதித்துள்ளது. பெங்களூர், திருவனந்தபுரம், ஐதராபாத் ஆகிய நகரங்களில் இறங்கியும் தமிழகத்துக்கு வரமுடியாது. எனவே தமிழர்கள் விமான போக்குவரத்து இல்லாமல் வெளிநாடுகளில் தவிக்கிறார்கள் தமிழக அரசு விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளதால் தமிழர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழர்களை மீட்க விமானம் மற்றும் கப்பல் சேவைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பா.ஜனதா பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

மற்ற மாநிலங்களை போல் தமிழகத்தை சேர்ந்தவர்களையும் மீட்டு தனிமைப்படுத்தி கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிபடுத்திய பிறகு வீடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News