செய்திகள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் சென்னையில் கொரோனா தொற்று அதிகம்- எடப்பாடி பழனிசாமி

Published On 2020-05-13 13:11 GMT   |   Update On 2020-05-13 17:40 GMT
மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை:

மாவட்ட கலெக்டர்கள் உடனான காணொலி காட்சி ஆலோசனை கூட்டத்தின் பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

இந்தியாவிலேயே மருத்துவச் சிகிச்சை அளிப்பதில் தமிழகம் முதன்மையாக விளங்குகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைக்கு சிறந்த பலன் கிடைத்துள்ளது. 

ஆனால் சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் கொரோனா தொற்று அதிகமாக இருக்கிறது. சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் வேறு மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் கொரோனா தொற்று ஏற்படும் என்று கணித்து முன்னரே எச்சரிக்கப்பட்டது. கோயம்பேடு சந்தை மூலம் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதை கண்டறிந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்காலிக சந்தை அமைக்கும் இடத்தில் வியாபாரத்தை தொடங்க அதிகாரிகள் கூறினர். 

கொரோனா தொற்று குறித்த அரசின் எச்சரிக்கையை கோயம்பேடு வியாபாரிகள் முதலில் ஏற்கவில்லை. தங்களுக்கு இழப்பு ஏற்பட்டு விடும் என அஞ்சி தற்காலிக சந்தைக்கு செல்ல வியாபாரிகள் மறுத்தனர். சென்னைக்கு வெளியே அமைக்கும் தற்காலிக சந்தைக்கு செல்ல வியாபாரிகள் விரும்பவில்லை. வேறு இடத்துக்கு சந்தையை மாற்ற வேண்டும் என்று கோயம்பேடு வியாபாரிகளிடம் பல முறை கேட்டுக் கொண்டோம். சந்தையை மூடுவது குறித்து கோயம்பேடு சந்தை வியாபாரிகளிடம் பல முறை பேச்சு நடத்தப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தையில் வியாபாரிகள் ஒத்துழைக்கவில்லை. அரசின் எச்சரிக்கையை ஏற்காததாலேயே கோயம்பேடு சந்தை மூலமாக கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகரித்துள்ளது. 

இதற்கிடையே அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு முழுமையாகச் சென்றடைவதை கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளேள். மேலும் எவ்வித குறைபாடும் இல்லாமல் மக்களை அரசு பாதுகாத்து வருகிறது. அரசின் நடவடிக்கையால் எந்த மாவட்டத்திலும் உணவுக்கு பிரச்சினை என்ற நிலை இல்லை. 

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பேருந்து உள்ளிட்ட வசதிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை கலெக்டர்கள் ஏற்படுத்தித் தர வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News