செய்திகள்
கோடை வெயில்

திருவண்ணாமலையில் அக்னி வெயிலால் பரவும் தோல் நோய்கள்- பொதுமக்கள் அவதி

Published On 2020-05-13 09:43 GMT   |   Update On 2020-05-13 09:43 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்னி வெயிலால் பரவும் தோல் நோய்களால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் காரணமாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அன்று முதல் மாவட்டம் முழுவதும் அனல் காற்று வீசுகிறது. 100 டிகிரி வரை வெயில் கொளுத்துகிறது

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் மிகுந்த வேதனை அடைகின்றனர்.

தாகத்தால் தவிக்கும் பொதுமக்கள் கரும்புச்சாறு, சர்பத், மோர் ஆகியவற்றை அருந்துகின்றனர். இருந்தாலும் சிறிது நேரத்திலேயே மீண்டும் தாகம் ஏற்படுகிறது. அக்னி வெயில் தலையில் விழுந்ததும் மயக்கம் வரும் நிலை ஏற்படுகிறது. எனவே பலர் தொப்பிகளை அணிந்தபடி வெளியில் செல்கின்றனர்.

அக்னி வெயில் உடலில் பட்டதும் தீயாய் சுட்டது போல் தோல் நோய்கள் ஏற்படுகிறது. உடலில் கொப்பளங்கள் வெடித்து புண்கள் வருகின்றன.

பெண்கள் கழுத்தில் நகை போட முடியவில்லை. அரிப்பு ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பலர் டாக்டர்களிடம் சிகிச்சை பெறுகின்றனர்.

இரவு நேரத்திலும் அனல் காற்றால் சரியாக தூங்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. மின்விசிறி காற்று அக்னியாக இருப்பதால் மிகவும் மக்கள் அவதிபடுகின்றனர். அதிலும் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

காலை, மாலை நேரங்களில் குளிக்கின்றனர். இரவில் குளித்தால் தான் தூங்க முடியும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

அக்னி நட்சத்திரம் எப்போது முடியும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போது 100 டிகிரி வரை வெயில் தாக்கம் உள்ளது.

Tags:    

Similar News