செய்திகள்
மோசடி

கும்பகோணத்தில் போலி கையெழுத்து போட்டு ரூ.5 லட்சம் மோசடி

Published On 2020-05-13 09:34 GMT   |   Update On 2020-05-13 09:34 GMT
கும்பகோணத்தில், போலி கையெழுத்து போட்டு ரூ.5 லட்சம் மோசடி செய்த இந்து சமய அறநிலையத்துறை ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்தவர் தங்கராசு. இவருடைய மகன் நர்சிங்(வயது 32). இவர், கும்பகோணத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அறநிலையத்துறை சார்பில் கிராம கோவில் பூசாரிகளுக்கு ஆலய மேம்பாட்டு நிதியாக ஆண்டுதோறும் ரூ.9 ஆயிரம் வழங்குவது வழக்கம்.

இந்த நிலையில் பூசாரிகளுக்கு வழங்குவதற்காக அறநிலையத்துறை உதவி ஆணையரின் கையெழுத்திட்ட காசோலை கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் உதவி ஆணையரின் கணக்கில் போதுமான இருப்பு தொகை இல்லை என காசோலையை வங்கி நிர்வாகம் திருப்பி அனுப்பியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அறநிலையத்துறையினர், வங்கிக்கு சென்று கணக்கு விவரங்களை ஆய்வு செய்தனர்.

அப்போது இளநிலை உதவியாளர் நர்சிங், அறநிலையத்துறை உதவி ஆணையரின் கையெழுத்தை போலியாக 50க்கும் மேற்பட்ட முறையில் போட்டு ரூ.5 லட்சம் வரை மோசடி செய்தது தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா, போலி கையெழுத்து போட்டு மோசடி செய்த நர்சிங்கை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News