செய்திகள்
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி

கொரோனா பாதித்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு தாமதமாக வருவதால் அதிகரிக்கும் உயிரிழப்பு

Published On 2020-05-13 07:21 GMT   |   Update On 2020-05-13 07:21 GMT
கொரோனா பாதித்தவர்கள் காலம் கடந்து வருவதால், உரிய சிகிச்சை அளித்தும் பலன் கிடைக்காமல் தொற்று தீவிரமாக பரவி உயிரிழப்பு ஏற்படுகிறது.
சென்னை:

சென்னையில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாகி வரும் நிலையில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. மருத்துவமனைக்கு தாமதமாக வருவதே இந்த உயிரிழப்புக்கு காரணம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மே மாதத்தில் மட்டும் கொரோனாவால் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 11 பேர் கடைசி நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால், உயிரிழந்துள்ளனர். 6 பேர் சேர்க்கப்பட்ட அதே நாளிலும், 5 பேர் அடுத்த சில நாட்களிலும் இறந்துள்ளனர்.

இந்த உயிரிழப்புக்கு காலதாமதமாக மருத்துவமனைக்கு வருவதே காரணம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். 4-வது நிலையிலுள்ள புற்றுநோய் பாதித்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் தாமதமாக மருத்துவமனைக்கு வந்ததால், அவரை காப்பாற்ற முடியாமல் உயிரிழப்பு ஏற்பட்டது.

உயிரை காப்பாற்ற முயற்சி எடுத்தும் அது பலனளிக்கவில்லை என்று செல்வ விநாயகம் தெரிவித்தார். கன்னியாகுமரியை சேர்ந்த 65 வயதுடைய ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு, கடந்த 9-ந் தேதி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அதே நாளில் உயிரிழந்தார். இதேபோல திருவள்ளூரைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவருக்கு ரத்த புற்றுநோய் இருந்தது. அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார். அவரும் அதே நாளில் உயிரிழந்தார்.

முதியவர்களை இந்நோய் பாதித்தநிலையில் காலதாமதமாக வருவதால் அவர்களின் உயிரை காப்பாற்ற முடிவதில்லை. அவர்கள் உயிர் பிழைப்பது கடினம் என்றும், அவர்களுக்கு அளிக்கும் சிகிச்சை பலனளிக்காது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சர்க்கரை மற்றும் ஆஸ்துமா நோயுடைய 36 வயது பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 9-ந் தேதி ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரும் அன்றைய தினமே உயிரிழந்தார்.

காலம் கடந்து வருவதால், உரிய சிகிச்சை அளித்தும் பலன் கிடைக்காமல் போகிறது. கொரோனா நோய் தொற்று தீவிரமாக பரவி உயிரிழப்பு ஏற்படுகிறது.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனுமதியில்லை. ஆனால் கேன்சர், சிறுநீரகம் பாதிப்பு போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கொரோனா தொற்று ஏற்பட்டு பின்னர் தாமதமாக அரசு ஆஸ்பத்திரிக்கு வருவதாலும் உயிரிழப்பு ஏற்படுகிறது.
Tags:    

Similar News