செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மையம்

இந்த 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Published On 2020-05-11 08:41 GMT   |   Update On 2020-05-11 12:20 GMT
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளதாவது:-

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்ப நிலை அதிபட்சமாக 37 டிகிரி செல்சியஸாக இருக்கும். மதுரை, திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்பு. அடுத்த இரு தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காலை 11. 30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

குமரிக்கடல் லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு ஒட்டிய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை வீசக் கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

மேலும் அந்தமான்-நிகோபார் பகுதியில் வரும் 16-ம் தேதி தென்மேற்கு பருவக்காற்று வீச வாய்ப்பு உள்ளதால் அன்றே தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
Tags:    

Similar News