செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

ஆரணி ஆரம்ப சுகாதார நிலைய நர்சு உள்பட 9 பேருக்கு கொரோனா

Published On 2020-05-09 12:13 GMT   |   Update On 2020-05-09 12:13 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.
ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர்கள் மூலம் கடந்த சில நாட்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த ஆரணி டவுனை சேர்ந்த 55 வயது பெண் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார்‌. இதனையடுத்து ஆரணி டவுன் திருவள்ளுவர் நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள டாக்டர்கள் நர்சுகள் மற்றும் ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் ஆரணி தர்மராஜா கோவில் தெருவில் வசித்து வரும் 32 வயது பெண் நர்சுக்கு இன்று கொரோனா உறுதியானது. இதனையடுத்து அந்த ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் முழுவதும் தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்டன. அங்கு பணியாற்றிய 7 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் ஆரம்ப சுகாதார நிலையத்தை பூட்டினர்.

இதேபோல் ஏற்கனவே கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்த பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் செய்யாறு அருகே உள்ள இரும்பேடு மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர், பிருதூர் கிராமத்தைச் சேர்ந்த 63 வயது முதியவர், தும்பை கிராமத்தைச் சேர்ந்த 37 வயது வாலிபர், மோரணம் காலனியைச் சேர்ந்த 30 வயது வாலிபர், மற்றும் அதே பகுதியை சேர்ந்த 2 பெண்கள் வெங்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளம்பெண், சேவூர் கிராமத்தைச் சேர்ந்த 58 வயது நபர் என மொத்தம் 9 பேர் இன்று ஒருநாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News