செய்திகள்
கோப்பு படம்.

தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் வெல்டிங் வைத்து ‘சீல்’ வைப்பு

Published On 2020-05-09 11:23 GMT   |   Update On 2020-05-09 11:23 GMT
தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் வெல்டிங் வைத்து சீல் வைக்கப்பட்டன. விற்பனையான பணத்தை உடனடியாக வங்கிகளில் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை:

ஊரடங்கு தடை உத்தரவு காலத்தில் டாஸ்மாக் கடைகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். முககவசம் அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

இதையடுத்து கொரோனா பாதித்த பகுதிகள் மற்றும் கட்டுப்பாடு பகுதிகளில் மதுக்கடைகளை திறக்காமல் மற்ற இடங்களில் அரசு திறந்தது.

சென்னை தவிர பிற மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது. 43 நாட்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டது மதுபிரியர்களுக்கு உற்சாகத்தை அளித்தது.

நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். ஒரே நாளில் ரூ. 170 கோடிக்கு மது விற்பனையும் நடந்தது. மதுக்கடைகளை திறந்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்தன. போராட்டமும் நடைபெற்றன.

அதையும் மீறி நேற்று 2-வது நாளாக கடைகள் செயல்பட்டது. நேற்று ரூ. 125 கோடிக்கு மது விற்பனை நடந்தது. இந்த நிலையில் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் மதுக்கடைகள் செயல்படுவதாக கூறி அனைத்து கடைகளையும் மூட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து அனைத்து கடைகளை பூட்டி ‘சீல்’ வைக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டார். மதுபானங்கள் கொள்ளை போவதை தடுக்க அனைத்து கடைகளை உடனடியாக வெல்டிங் வைத்து ‘சீல்’ வைக்க வேண்டும் என்று மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை சீல் வைக்கும் பணி இன்று தொடங்கியது.

தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் கடைகள் இருந்த போதிலும் 3,700 கடைகள் மட்டுமே செயல்பட்டு வந்தன. அந்த கடைகளில் பாதுகாப்பு கருதி சீல் வைக்கப்பட்டன.

ஒருசில கடைகளில் மட்டுமே மதுபானங்கள் விற்று தீர்ந்துவிட்டன. பெரும்பாலான கடைகளில் மதுபானங்கள் இருப்பு உள்ளதால் அதனை பாதுகாக்க இரும்பு ராடுகள் மூலம் ‌ஷட்டரில் வெல்டிங் வைத்து சீல் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருப்பதால் அனைத்து கடை மேற்பார்வையாளர்களும் போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணியில் இன்று ஈடுபட்டனர்.

கோடிக்கணக்கான மதிப்புள்ள மதுபானங்கள் கடைகளில் இருப்பதால் கொள்ளை போவதற்கான வாய்ப்பு உள்ளது. கடந்த முறை கடைகள் அடைக்கப்பட்ட போது பல இடங்களில் கொள்ளை சம்பவங்கள் நடந்தது.

இதனால் பல லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது. பின்னர் பாதுகாப்பு இல்லாத டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபானங்கள் திருமண மண்டபங்களுக்கு மாற்றப்பட்டன. கடைகளிலும் வெல்டிங் வைத்து சீல் வைக்கப்பட்டன. இதன் மூலம் மது பானங்கள் பாதுகாக்கப்பட்டன. இதை முறையை இப்போதும் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

விற்பனையான பணத்தை உடனடியாக வங்கிகளில் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் குறைந்தது ரூ.10 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது. ஒருசில கடைகளில் ரூ.20 லட்சம் வரையும் விற்பனை நடந்துள்ளது. அந்த பணத்தை வங்கிகளில் ஊழியர்கள் இன்று செலுத்துகிறார்கள். மதுபானங்கள் இருப்பை சரிபார்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News