செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்க வாய்ப்பு

Published On 2020-05-08 13:38 GMT   |   Update On 2020-05-08 13:38 GMT
மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தற்போது வரை தண்ணீர் இருப்பதால் இந்தாண்டு வழக்கமான தேதியான ஜூன் மாதம் 12-ந் தேதி அணை திறக்க வாய்ப்புள்ளது.
மேட்டூர்:

மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் சம்பா மற்றும் தாளடி சாகுபடிகளுக்காக ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும்.

இந்த தண்ணீர் திறப்பு நீர் இருப்பை பொறுத்து மாறுபடும். 80 அடிக்கு மேல் நீர்மட்டம் வரும் போதும், அணைக்கு போதுமான நீர்வரத்து இருந்தால் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். கடந்த ஆண்டு கன மழை பெய்தாலும் ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி தான் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது. அன்றே பாசனத்திற்காக காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு 4 முறை மேட்டூர் அணை நிரம்பியது.

கடந்த 269 நாட்களாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு மேல் நீடிக்கிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 100.19 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து 986 அடியாகவும், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரியில் 500 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

100 அடிக்கு மேல் தற்போது வரை மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பதால் இந்தாண்டு வழக்கமான தேதியான ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்க வாய்ப்புள்ளது.

இதற்கிடையே தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுனர் குழுவை சேர்ந்த கலைவாணன், வெங்கடேசன், பழனியப்பன், கலியமூர்த்தி ஆகியோர் மேட்டூர் அணையை ஜூன் மாதம் 12-ந் தே தி திறக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

மேலும் அதில் கூறி இருப்பதாவது:-

விவசாயிகள் முன் ஏற்பாடு செய்திட வசதியாக அணை திறக்கும் காலத்தை வருகிற 15-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும். பாசன வாய்க்கால், ஆறுகள், ஏரிகள், மராமத்துக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து பணியை காலத்தே முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து பகுதிகளுக்கும் நீர் தாமதமின்றி செல்ல வசதியாக போர்க்கால அடிப்படையில் ஆறுகள், பாசன வாய்க்கால்கள், ஏரிகள் ஆகியவை தூர்வாரப்பட வேண்டும். கட்டுமானங்களை செப்பனிட்டு அணை திறப்பதற்கு முன்கூட்டியே முடித்து தயார் நிலையில் பொதுப்பணித்துறை வைத்திருக்க வேண்டும்,

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News