செய்திகள்
சீமான்

மதுக்கடைகளை திறப்பது கொரோனாவை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதற்கு ஒப்பானது- சீமான்

Published On 2020-05-05 03:59 GMT   |   Update On 2020-05-05 03:59 GMT
மதுபானக்கடைகளைத் திறப்பது கொரோனாவை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதற்கு ஒப்பானது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழகத்திலும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.  தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வரும் 7 ஆம் தேதி முதல் மதுபானக்கடைகளைத் திறக்கவிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது. இம்முடிவு 40 நாட்களுக்கு மேலாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கை ஒட்டுமொத்தமாகப் பாழ்படுத்தி, நோய்த்தொற்று பரவலைக் கட்டற்ற நிலைக்குக் கொண்டு சென்றுவிடும் பேராபத்தாகும். தனிமைப்படுத்தலும், தனிமனித விலகலும் பேரவசியமாக உள்ள இக்காலக்கட்டத்தில்,  அதனைக் குலைக்க அரசே வழிவகுக்கக்கூடாது. 

தமிழகத்தில் நோய்த்தொற்று சமூகப் பரவலை எட்டியுள்ள நிலையில் மதுபானக்கடைகளைத் திறப்பது கொரோனாவை சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்பதற்கு ஒப்பானது. அத்தகைய வரலாற்றுப் பிழையை செய்து பெரும்பழிக்கு ஆளாக வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். ஆகவே, மதுபானக்கடைகளைத் திறக்கும் முடிவினை உடனடியாகக் கைவிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News