செய்திகள்
ஸ்டெதஸ்கோப்

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கூடுதலாக 150 டாக்டர்கள் மருத்துவ சேவை

Published On 2020-05-01 09:35 GMT   |   Update On 2020-05-01 09:35 GMT
சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் மருத்துவ பணிகள் செய்வதற்காக கூடுதலாக 150 டாக்டர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை:

சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. நேற்று ஒரே நாளில் 131 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது. 15 மண்டலங்களில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள களம் இறங்கி உள்ளது.

அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள ராயபுரம், திரு.வி.க. நகர், கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை, அண்ணாநகர் ஆகிய மண்டலங்களில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. அங்குள்ள 233 கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் வெளிநபர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த தெருக்களில் உள்ள மக்களை தினமும் சுகாதார பணியாளர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக சென்று கொரோனா அறிகுறி உள்ளதா? என பரிசோதனை செய்கிறார்கள்.

தற்போது அறிகுறி இல்லாமல் இந்த நோய் தீவிரமாக பரவி வருவதால் தனிமைப்படுத்தப்பட்ட இந்த பகுதிகளில் மக்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். கொரோனா பாதித்த குடும்பத்தை தவிர மற்ற குடியிருப்பு மக்கள் பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தினமும் காலை-மாலையில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இந்த பகுதியில் உள்ள வீடுகள், வாகனங்கள், தெருக்கள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

தனிமைப்படுத்தப்பட்ட அந்த பகுதி மக்களுக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள், குடிநீர், மருந்து போன்றவற்றை வீடுகளுக்கு சென்று வழங்கும் பணி தற்போது நடைபெறுகிறது.

அவர்கள் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவதற்கு பதிலாக நேரிடையாக வீடுகளுக்கே விநியோகிக்கப்படுகிறது.

இதுதவிர இந்த கட்டுப்பாட்டு பகுதிக்குள் யாரையும் அனுமதிக்காமல் இருப்பதற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் மருத்துவ பணிகள் செய்வதற்காக கூடுதலாக 150 டாக்டர்கள் பணியில் ஈடுபடுகிறார்கள்.

கொரோனா அறிகுறி தென்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அந்த பகுதி மக்களுக்கு கொரோனா பற்றிய போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு வலிவுறுத்தப்படுகிறார்கள். தூய்மை பணியாளர்களும், சுகாதார பணியாளர்களும் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

களப்பணியாளர்களுக்கு எளிதாக நோய் தொற்று ஏற்படுவதால் அவர்கள் கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட உபகரணங்களை அணிந்து செல்கிறார்கள்.

சென்னையில் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிகளும் பல்வேறு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் இதுபற்றிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை களப்பணியாளர்களுக்கு வழங்கி கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
Tags:    

Similar News