செய்திகள்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

ஊரடங்கு நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Published On 2020-04-30 05:35 GMT   |   Update On 2020-04-30 05:35 GMT
ஊரடங்கு குறித்து அடுத்த கட்ட அறிவிப்பை மத்திய, மாநில அரசுகள் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பிறகும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கை நீட்டிப்பதா? அல்லது தளர்த்துவதா? என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஊரடங்கு குறித்த அடுத்தகட்ட அறிவிப்பு என்ன என்பதை மத்திய, மாநில அரசுகள் சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

“மே 3ம்தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படுமா? அல்லது நீட்டிக்கப்படுமா? என்ற குழப்பம் மற்றும் எதிர்பார்ப்பு மக்கள் மனதில் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு ஒத்துழைப்பு அளிப்பது மக்களின் கடமையாகும். அதேசமயம் 35 நாட்களுக்கும் மேலாக வீட்டில் முடங்கி கிடக்கும் மக்களின் மனநிலை மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். 

ஊரடங்கு குறித்து கடைசி நேரத்தில் அறிவித்து பதற்றத்தை அதிகரிக்காமல், முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்’ என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Tags:    

Similar News