செய்திகள்
கமலாத்தாள் பாட்டி.

ஊரடங்கிலும் மக்கள் சேவை- ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் மூதாட்டி

Published On 2020-04-27 04:16 GMT   |   Update On 2020-04-27 04:16 GMT
ஊரடங்கு உள்ள நிலையிலும் வெளியூரில் இருந்து வந்தவர்கள் மற்றும் உள்ளூரில் இருப்பவர்கள் என தினமும் 400 பேருக்கு மேல் உணவளித்து வருகிறார் கமலாத்தாள் பாட்டி.
கோவை:

கோவை அருகே உள்ள ஆலாந்துறை வடிவேலம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள் (வயது 85). இவர் 1 ரூபாய்க்கு இட்லி வழங்கி வருவதால் இவரை இட்லி பாட்டி என்றே பலரும் அழைத்து வந்தனர்.

தற்போது கொரோனா பரவல் காரணமாக நாடே ஸ்தம்பித்து இருக்கும் சூழலில் பம்பரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார் இட்லி பாட்டி. ஊரடங்கு உள்ள நிலையிலும் வெளியூரில் இருந்து வந்தவர்கள் மற்றும் உள்ளூரில் இருப்பவர்கள் என தினமும் 400 பேருக்கு மேல் உணவளித்து வருகின்றார். தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வால், பொட்டுக்கடலை, உளுந்து முன்பு கிலோ ரூ.150 வரை விற்கப்படுகிறது. இருந்தாலும் புன்னகை மாறாமல், எப்படியாவது சமாளித்து ஒரு ரூபாய்க்கு இட்லியை கொடுத்து வருகிறார் மூதாட்டி கமலாத்தாள். தன்னை தேடி பல பேர் வந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை கொடுத்து வருவதாக தெரிவித்தார்.

இதுகுறித்து கமலாத்தாள் கூறியதாவது:-

மற்றவர்கள் செய்யும் உதவியை நான் மறக்க மாட்டேன். அரிசி, பருப்பு உள்ளிட்டவை விலை உயர்ந்த போதிலும் சமாளித்துக் கொண்டு 1 ரூபாய்க்கு இட்லி வழங்கி வருகிறேன். தினமும் 400 பேர் என்னிடம் இட்லி வாங்கிச் செல்கிறார்கள். எனது மகனும், பேரனும் உதவியாக உள்ளனர்.

முன்பு விறகு அடுப்பில் சமையல் செய்தேன். இதனால் புகையால் பாதிக்கப்பட்டேன். தற்போது பலரது உதவியால் கியாஸ் அடுப்பு மூலம் இட்லி அவித்து வழங்கி வருகிறேன்.

கொரோனா பாதிப்பினால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் என்னால் இயன்ற உதவியை 1 ரூபாய்க்கு இட்லி வழங்கி வருகிறேன். என்னை சந்தித்து பலரும் பாராட்டி செல்வதும், உதவி பொருட்களை வழங்கி வருவதும் தள்ளாத வயதில் மேலும் உத்வேகத்தை அளித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News