செய்திகள்
திருமாவளவன்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப நடவடிக்கை- திருமாவளவன் வலியுறுத்தல்

Published On 2020-04-26 05:35 GMT   |   Update On 2020-04-26 05:35 GMT
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மே 3-ந்தேதிக்கு பிறகு சொந்த ஊர்களுக்கு திரும்ப மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கு மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் மிகப்பெரும் சவாலாகவும், தடையாகவும் இருப்பது புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினையே ஆகும். அந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டால்தான் சமூகப் பரவல் அதிகரிக்காமல் தடுக்க முடியும். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மே 3-ந்தேதிக்கு பிறகு சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஊரடங்கு படிப்படியாக விலக்கி கொள்ளப்படும்போது கிராமப்புற பொருளாதார நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கி இருக்கிறது என்பது இதுவரை தெரியவில்லை. 2020-ம் ஆண்டு பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்டத்துக்கு ஒதுக்கிய நிதி 2019-ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையை விட 13.4 சதவீதம் குறைவு ஆகும். இந்த நிதியை வைத்துக்கொண்டு ஒருவருக்கு 10 நாள் கூட வேலை தரமுடியாது. எனவே, மத்திய அரசு இந்த ஒதுக்கீட்டை இரு மடங்காக உயர்த்த வேண்டும். இந்த ஆண்டுக்கான நிதியை ஒரே தவணையில் மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டும்.

தமிழக அரசு, 100 நாள் வேலை தொடங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. ஒரு கிராமத்தில் எத்தனை நாள் வேலை அளிக்கப்படும், அதற்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்பது பற்றிய எந்த விவரமும் அந்த அறிவிப்பில் இல்லை. குறைந்தபட்சம் 50 நாட்களுக்காவது தொடர்ந்து வேலை வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News