செய்திகள்
அட்சய திருதியை

அட்சய திருதியை: நகைக்கடைகளில் ஆன்லைன் விற்பனை தொடங்கியது

Published On 2020-04-25 02:46 GMT   |   Update On 2020-04-25 02:46 GMT
அட்சய திருதியையொட்டி நகைக்கடைகளில் ஆன்லைன் மூலம் தங்கம் விற்பனை தொடங்கியது.
சென்னை :

கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்பே பெரிய வணிக வளாகங்கள், நகைக்கடைகள் மூடப்பட்டன. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் 3-வது வாரத்தில் இருந்து நகைக்கடைகள் மூடப்பட்டுள்ளன. அதன்பின்னர், தங்க நகை விற்பனை இல்லை.

இந்த நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அட்சய திருதியை வருகிறது. அட்சய திருதியை தினத்தன்று தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பதும், வாழ்வு வளம்பெறும் என்பதும் மக்களிடம் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அந்த நாளில் ஒரு கிராம் தங்க நகையாவது வாங்கிவிட வேண்டும் என்று பெரும்பாலானோர் நினைப்பது உண்டு. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

ஆனால் இந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக நகைக்கடைகள் மூடப்பட்டு இருப்பதால், நகைகள் எப்படி வாங்க முடியும்? என்ற கவலை பலருக்கு இருந்தது. அதனை தவிர்க்கும் விதமாக நகைக்கடைக்காரர்கள் அட்சய திருதியையொட்டி ஆன்லைன் விற்பனையை தொடங்கி இருக்கின்றனர்.

இதன் மூலம், சம்பந்தப்பட்ட நகைக்கடையின் இணையதளத்துக்கு சென்று ஆன்லைனில் தங்கத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம். அன்றைய தினத்தின் மதிப்பில் எவ்வளவு கிராம் தங்கம் வேண்டுமோ? பணத்தை செலுத்தி அதை பொதுமக்கள் வாங்கலாம்.

ஊரடங்கு காலம் முடிந்ததும், எந்த கடைகளில் ‘புக்கிங்’ செய்தார்களோ? அந்த கடைக்கு சென்று பொதுமக்கள் தங்க காசாக வாங்கி கொள்ளலாம். நகையாக வாங்க விரும்பினால், அதற்கான செய்கூலி, சேதாரத்துக்கு என்று தனியாக பணம் செலுத்தி வாங்கி செல்லலாம். ஆன்லைன் மூலம் தங்கம் வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Tags:    

Similar News