செய்திகள்
தங்கம்

அட்சய திருதியை நாளில் ‘ஆன்லைன்’ மூலம் தங்கம் வாங்கலாம்: முன்னணி நகைக்கடைகள் அறிவிப்பு

Published On 2020-04-23 03:14 GMT   |   Update On 2020-04-23 03:14 GMT
ஊரடங்கு காரணமாக நகைக் கடைகள் மூடி இருந்தாலும் அட்சய திருதியை நாளில் ஆன்லைன் மூலம் தங்கம் வாங்க முடியும் என்று நகைக்கடைகள் அறிவித்துள்ளன.
சென்னை :

ஊரடங்கு காரணமாக நகைக் கடைகள் மூடி இருந்தாலும் அட்சய திருதியை நாளில் ஆன்லைன் மூலம் தங்கம் வாங்க முடியும் என்று நகைக்கடைகள் அறிவித்துள்ளன. இதுபற்றிய விவரம் வருமாறு: -

சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வருகிற 3-வது திதியை, ‘அட்சய திருதியை’ என்று குறிப்பிடுவார்கள். அந்த அட்சய திருதியை வருகிற 26.4.2020 (ஞாயிற்றுக்கிழமை) வருகின்றது.

இதனால் அந்த நாளில் சிறிய அளவிலாவது தங்கம் உள்பட மங்கல பொருட்களை வாங்குவது வழக்கம். தங்க ஆபரணங்களை வாங்குவது நன்மை தரும் என்றும், அதன் மூலம் மேலும், மேலும் தங்கம் அபிவிருத்தியாகும் என்பதும் மக்களின் நம்பிக்கை.

இப்பொழுது கொரோனா நோயின் தாக்குதலால் உலக மக்கள் எல்லோரும் ஊரடங்கு சட்டம் காரணமாக வீட்டிலே முடங்கி உள்ளனர். நகைக்கடைகள் உள்பட பல்வேறு வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன.

இச்சூழ்நிலையில் அள்ளிக் கொடுக்கும் அட்சய திருதியை நாள் வருகின்றது. அதை எப்படிக் கொண்டாடுவது? அந்த நாளில் தங்கம் வாங்குவது எப்படி? என்று மக்கள் நினைக்கலாம்.

இந்த நெருக்கடியான நிலையில் ஆன்லைன் மூலம் தங்கம் வாங்கும் வசதியை பெரும்பாலான நகைக் கடைகள் அறிவித்துள்ளன. இதையொட்டி பல நகைக்கடைகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் இதற்கான அறிவிப்பை அனுப்பியுள்ளன.

சென்னையில் புகழ்பெற்ற நகைக் கடை ஒன்று தனது வாடிக்கையாளருக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பிய தகவல் வருமாறு:-

“வருகின்ற அட்சய திருதியை உங்களுக்கு வளமான எதிர்காலத்தை அளிக்க வாழ்த்துகிறோம். எங்கள் நகைக்கடையில் ஆன்லைன் மூலம் நீங்கள் பரிசுக் கூப்பன்களை வாங்கலாம். லாக் டவுன் முடிந்த பின்னர் இந்த பரிசுக்கூப்பனை பயன்படுத்தி தங்க நகைகள், தங்க காசுகள் வாங்கலாம். இதற்கு வாட் வரியில் இருந்து சலுகையும், பிற கவர்ச்சிகரமான பரிசுகளும் உண்டு”.

இவ்வாறு அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையொட்டி பலர் ஆன்லைன் மூலம் தங்க நகைகள் வாங்க ஆர்வம் காட்டி வருவதாக நகைக்கடை உரிமை யாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அட்சய திருதியை நாளில் ஆன்லைன் மூலம் தங்கம் வாங்குவது குறித்து தினத்தந்தி ஜோதிடர் சிவல்புரி சிங்காரத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

பொதுவாக ஏதேனும் ஒரு மங்கலப் பொருளை அட்சய திருதியை நாளில் வாங்குவது நல்லது என்று சொல்வார்கள். ஆனால் ஊரடங்குநிலை அமல்படுத்தியிருக்கும் இந்த நேரத்தில் மக்கள் எந்தப் பொருளையும் வாங்க இயலாத நிலைக்கும் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

எனவே மங்கலப் பொருட்களில் முக்கியத்துவம் வாய்ந்த உப்பு, மஞ்சள், கனி வகைகள், தெய்வப்படங்கள் போன்றவற்றை வாங்கி இல்லத்தில் வைக்கலாம். மளிகைச் சாமான்கள் அரிசி, பருப்பு வகைகள் போன்றவற்றைக் கூட வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம்.

அதே நேரம் விருப்பம் உள்ளவர்கள் தங்களுக்கோ, தங்கள் குடும்பத்திற்கோ, தங்கள் குழந்தைகளின் திருமண வாய்ப்புகளை முன்னிட்டோ தங்க ஆபரணங்கள் வாங்க நினைப்பவர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து தொகையைச் செலுத்தி தங்கம் வாங்கலாம். ஊரடங்கு முடிந்த பிறகு, நாடு சராசரி நிலைமைக்கு வந்தபிறகு கடைகளுக்குச் சென்று வாங்கிக் கொள்வதற்கு கூட இந்த நாகரிக காலத்தில் வழிவகுத்துள்ளனர்.

எனவே தேவைப்படுவோர் தங்கம், வெள்ளி ஆபரணங்களை ஆன்லைன் வர்த்தகம் மூலம் ராசியான கடைகள் அல்லது நம்பிக்கைக்கு பாத்திரமான கடைகளுக்கு தொடர்பு கொண்டு உங்கள் பெயரில் பதிவு செய்து வாங்கலாம். அட்சய திருதியையில் வாங்கும் தங்கத்தால் வளர்ச்சி கூடும் என்பது மக்களின் நம்பிக்கை என்பதால் இந்த வசதியை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் தங்கம் வாங்கலாம்.

உலக மக்கள் அனைவரும் நோய் நொடிகள் அகன்று மீண்டும் பழைய நிலையை அடையவும், ஆரோக்கியத்துடன் வாழவும் அட்சய திருதியை நாளில் நாம் ஒவ்வொருவரும் செய்யும் பிரார்த்தனையும் நல்ல பலன்தரும்.

இவ்வாறு ஜோதிடர் சிவல்புரி சிங்காரம் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News