செய்திகள்
கைது செய்யப்பட்ட வாலிபர்கள்

போலீஸ் இன்ஸ்பெக்டரின் செல்போன், பணம் திருடிய 4 வாலிபர்கள் கைது

Published On 2020-04-18 11:36 GMT   |   Update On 2020-04-18 11:36 GMT
குளச்சல் தங்கும் விடுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டரின் செல்போன் மற்றும் ரூ.38 ஆயிரம் திருடிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
குளச்சல்:

குளச்சலில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக ராதாகிருஷ்ணன் பணியாற்றி வருகிறார். இவர் குளச்சல் மெயின் ரோட்டில் ஒரு விடுதியில் தங்கியிருந்தார். அப்போது அறையில் வைத்திருந்த செல்போன், கைகெடிகாரம், ரூ.3 ஆயிரம் ஆகியவை மாயமாகி இருந்தன. மேலும், விடுதியின் வரவேற்பு அறையில் பீரோவில் வைத்திருந்த ரூ.38 ஆயிரமும் திருடப்பட்டு இருந்தது. நள்ளிரவில் மர்ம நபர்கள் விடுதியின் பின்பக்க கதவை உடைத்து திருடிச் சென்றது தெரியவந்தது. இதுபற்றி குளச்சல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதேபோல், இந்த திருட்டு சம்பவம் நடந்த அதே நாள் காலையில் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 4 மீன்பிடி தொழிலாளர்களின் செல்போன்களும் திருட்டு போனதாக போலீசில் புகார் செய்தனர்.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சுஜீத் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் குளச்சல் லியோன்நகரை சேர்ந்த எபிநாயகம் என்ற டைசன் (வயது 23) திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, டைசனுடன் துறைமுகத்தெருவை சேர்ந்த ஆன்றனி ராகுல் (20), ஆகாஷ் என்ற கிருஷ்ணன் (20), நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஸ்ரீனிவாசபுரத்தை சேர்ந்த மணி என்ற சுடலை மணி (26) ஆகியோரும் சேர்ந்து இன்ஸ்பெக்டரின் பணம், செல்போனை திருடியது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் 4 வாலிபர்களையும் கைது செய்து இரணியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். இதில் டைசன் ஏற்கனவே திருட்டு வழக்கில் கைதாகி கடந்த மாதம் 23-ம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News