செய்திகள்
முக ஸ்டாலின்

ஏழைகளுக்கு உணவு வழங்க ஐகோர்ட் அனுமதி: தி.மு.க.வின் மக்கள் பணிக்கு கிடைத்த வெற்றி - முக ஸ்டாலின்

Published On 2020-04-17 03:29 GMT   |   Update On 2020-04-17 03:29 GMT
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு உணவு வழங்க ஐகோர்ட்டு அனுமதி அளித்து இருப்பது தி.மு.க.வின் மக்கள் பணிக்கு கிடைத்த வெற்றி என தி.மு.க. தலைவர் முக ஸ்டாலின் கூறி உள்ளார்.
சென்னை:

கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள ஊரடங்கை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து உள்ளன. ஊரடங்கால் ஏழை எளிய, அடித்தட்டு விளிம்பு நிலை மக்கள் செய்வதறியாது திகைத்து இருக்கின்றனர்.

அவர்கள் உயிர்வாழ்வதற்கு அவசியமான அன்றாடத் தேவைகள், முழுமையாக கிடைக்காவிட்டாலும் பெருமளவுக்கேனும் நிவர்த்தி செய்ய மத்திய, மாநில அரசுகள் தனித்திட்டங்கள் எதையும் இதுவரை அறிவிக்கவில்லை.

இந்தநிலையில் தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுநல அமைப்புகள் பலரும் பசியால் வாடுவோர்க்கு அவ்வப்போது தங்களால் முடிந்த உதவிகளை நேரடியாக செய்து வந்தார்கள். இந்த உதவிகள் பெரும் வரவேற்பை பெற்றதால், ஆளும்கட்சியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

பொதுமக்களுக்கு யாரும் நேரடியாக உதவிகள் செய்யக்கூடாது; அப்படித் தருவதாக இருந்தால் அரசிடம்தான் தர வேண்டும் என்று சர்வாதிகார எண்ணத்துடன் அ.தி.மு.க. அரசு தடை விதித்தது. இதனை தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம்.

நீதியரசர்கள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், ‘அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஏழை, எளிய மக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கலாம். ஆனால், அவ்வாறு வழங்குவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்பு, அரசு அதிகாரிகளுக்குத் தெரிவித்திட வேண்டும். வாகன ஓட்டுனர் தவிர மூன்று பேருக்கு மிகாமல் செல்ல வேண்டும். அரசு அறிவித்துள்ள சமூக விலகலையும், விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்கள்.இந்த தீர்ப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். தி.மு.க.வின் மக்கள் நலன் சார்ந்த எண்ணத்துக்கும், ஈடுபாட்டுக்கும், பணிகளுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி இது.

இனிமேலாவது அ.தி.மு.க. அரசு, ஏழை எளியோர் பரிதவிக்கும் இந்தப் பேரிடர் காலத்தில் தன்னை முன்னிறுத்திக்கொண்டு, அரசியல் கலந்த முக்கியத்துவம் தேடும் கவனத்தைக் கைவிட்டு, பரந்த உள்ளத்துடன் பரிவு எண்ணத்துடன் நடந்து கொள்ளும் என்றும், பசித்தோருக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிடும் என்றும் எதிர்பார்க்கிறேன்.

நீதிமன்ற வழிகாட்டுதல் படியும், விழிப்புணர்வு நெறிமுறைகளின் படியும் எமது நிவாரணப் பணிகள் தொய்வின்றி தொடரும். தமிழகத்தில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும், சென்னை ஐகோர்ட்டு உத்தரவை முழுமையாக கடைப்பிடித்து, கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளியோருக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை தேவைப்படும் இடங்களில் எல்லாம் தவறாது வழங்கிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News