செய்திகள்
கோப்பு படம்

டாஸ்மாக் கடையை திறக்க கோரிய வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2020-04-17 03:17 GMT   |   Update On 2020-04-17 03:17 GMT
குடிக்கு அடிமையானவர்கள் மரணமடைவதால், அவர்களது நலன் கருதி தினமும் 2 மணி நேரம் டாஸ்மாக் மதுபானக் கடையை திறக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னையை சேர்ந்த வக்கீல் எஸ்.ஸ்டாலின் ராஜா, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் பல ஆண்டுகளாக டாஸ்மாக் நிறுவனம் மூலம் அரசே மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தினாலும், அதை ஏற்காமல், அப்பாவி மக்களுக்கு தமிழக அரசு மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. இதனால், பலர் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர். இதுபோன்ற நபர்களை மனதளவில் பாதிக்கப்பட்ட நபராக அரசு நடத்துவது இல்லை. மதுவுக்கு அடிமையானவர்கள் மீது அரசு எந்த ஒரு அக்கறையும் காட்டுவது இல்லை. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

மது கிடைக்காமல், குடி பழக்கத்துக்கு அடிமையானவர்கள் சேவிங் லோஷன், கிருமி நாசினி ஆகியவற்றை குடித்து இறந்துள்ளனர். சிலர் தற்கொலையும் செய்துள்ளனர். மது கிடைக்காத காரணத்துக்காக இதுவரை தமிழகத்தில் 10 பேர் இறந்துள்ளனர். எனவே, குடிக்கு அடிமையானவர்களின் நலன் கருதி, தமிழகத்தில் தினமும் 2 மணி நேரம் டாஸ்மாக் கடைகளை திறக்கவேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால், ‘ஊரடங்கு அமலில் உள்ளதால், மதுபானக்கடைகளை திறக்கக்கூடாது என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டும், கேரள மாநில ஐகோர்ட்டும் தீர்ப்பு அளித்துள்ளன’ என்று கூறினார். இதையடுத்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
Tags:    

Similar News