செய்திகள்
சிறை

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றுபவர்களுக்கு 2 ஆண்டு சிறை - நீதிபதி எச்சரிக்கை

Published On 2020-04-08 17:18 GMT   |   Update On 2020-04-08 17:18 GMT
ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றுபவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை பெற நேரிடும் என்று கிருஷ்ணகிரி சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான தமிழ்செல்வன் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான தமிழ்செல்வன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருந்து அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். சுகாதாரத்துறை, காவல் துறை, வருவாய்த்துறையினர் மக்களுக்காக பணியாற்றுகிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் தேவைக்கு மட்டும் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வெளியில் செல்ல வேண்டும்.

ஊரடங்கு உத்தரவு நேரத்தில் தடையை மீறி வெளியே செல்வதின் காரணமாக காவல் துறையால் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. அரசு நிர்வாகமும் பாதிக்கப்படுகிறது. தற்போது உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி சிறையில் இருந்த 57 கைதிகள் ஜாமீனில் அனுப்பப்பட்டுள்ளனர். சிறையில் கூட்டத்தை குறைக்கவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்கிறார்கள். வாகனங்களை பறிமுதல் செய்கிறார்கள்.

தற்போதுள்ள சூழ்நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்து வாகனங்களை உடனடியாக பெற முடியாது. ஊரடங்கு விலக்கப்பட்டு, சாதாரண நிலைக்கு திரும்பிய பிறகு தான் நீதிமன்ற நடைமுறைகளை பின்பற்றி பின்னர் வாகனங்களை எடுக்க முடியும். அதே போல ஊரடங்கு உத்தரவை மீறி, தொற்று நோயை பரப்பும் நோக்குடன் வெளியில் செல்லுதல், பேரிடர் ஏற்படுத்துதல், சுகாதாரத்தை கடைபிடிக்காமை ஆகிய குற்றங்களுக்காக 2 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை பெற நேரிடும். எனவே மக்கள் அரசின் உத்தரவுகளை மதித்து வீட்டில் இருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதியும், மாவட்ட நீதிபதியுமான அறிவொளி உடன் இருந்தார்.
Tags:    

Similar News