செய்திகள்
கைது

திருச்சி அருகே இடப்பிரச்சனையில் வெடிகுண்டு வீச்சு- 9 பேர் கைது

Published On 2020-04-08 15:45 GMT   |   Update On 2020-04-08 15:45 GMT
திருச்சி அருகே இடப்பிரச்சனையில் வெடிகுண்டு வீசிய தொடர்பாக தி.மு.க. கவுன்சிலர் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:

திருச்சி அருகே உள்ள மணிகண்டம் கும்பக்குறிச்சி பாத்திமா நகரைச் சேர்ந்தவர் அடைக்கண் மகன் பழனிச்சாமி (வயது 40), விவசாயி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டி என்பவரது மகன் பழனிச்சாமிக்கும் அங்கு உள்ள கோவில் அருகே உள்ள இடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. 

இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண்டி மகன் பழனிச்சாமி மணிகண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார். போலீஸ் சப்--இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ் இரண்டு தரப்பினரையும் அழைத்துப் பேசி இருந்தார். அப்போது இருதரப்புக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அடைக்கன் மகன் பழனிச்சாமியை மிரட்ட, ஆண்டி மகன் பழனிச்சாமி தனக்கு ஆதரவாக காரில் கும்பலை அழைத்து வந்துள்ளார். அவருக்கு ஆதரவாக அந்த பகுதியை சேர்ந்த ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர் அருணாச்சலம் இருந்துள்ளார். 
அப்போது அடைக்கண் மகன் பழனிச்சாமியை மிரட்டும் வகையில் எதிர் தரப்பினர் காரில் செல்லும் போது நடுவூரில் வைத்து வெங்காய வெடியை வீசி வெடிக்க  வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

இதுகுறித்து அடைக்கண் மகன் பழனிச்சாமி மணிகண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விரைந்தனர். வெடிகுண்டு வெடித்த இடத்தை பார்வையிட்டனர். இதுதொடர்பாக பழனிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் அருணாச்சலம், ஆண்டி மகன் பழனிச்சாமி, முருகேசன் மற்றும் லால்குடி, காட்டூர் சூறாவளிபட்டியை சேர்ந்த 6 பேர் உள்பட 9 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News