செய்திகள்
சென்னை மாநகராட்சி

சென்னையில் 67 இடங்கள் சீல் வைப்பு- மாநகராட்சி நடவடிக்கை

Published On 2020-04-08 11:41 GMT   |   Update On 2020-04-08 11:41 GMT
கொரோனா பாதுகாப்புக்காக சென்னையில் 30 இடங்களில் ஏற்கனவே பாதுகாப்பு வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிதாக 37 இடங்கள் சேர்த்து மொத்தம் 67 இடங்களில் பாதுகாப்பு வளையங்கள் அமைத்து சீல் வைக்கப்பட்டுள்ளன.
சென்னை:

சென்னை மாநகராட்சி சார்பில் வீடுகளுக்கு நேரடியாக சென்று கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியும் பணி நடந்து வருகிறது.

சென்னை திருவெற்றியூர், சன்னதி தெருவில் இந்த பணிகளை மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் ஆய்வு செய்தார். மற்ற மாநில பயணிகள் மற்றும் ஆதரவற்றோர் தங்க வைக்கப்பட்டுள்ள திருமண மண்டபத்தையும் அவர் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு தோறும் கொரோனா குறித்து ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏதாவது ஒரு பகுதியில் கொரோனா தொற்றை உறுதி செய்யும் பட்சத்தில் அந்த பகுதியில் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் 30 இடங்களில் ஏற்கனவே பாதுகாப்பு வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிதாக 37 இடங்கள் சேர்த்து மொத்தம் 67 இடங்களில் பாதுகாப்பு வளையங்கள் அமைத்து சீல் வைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு வசதிக்காகத்தான் கொரோனா உறுதி செய்யப்பட்ட இடங்கள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பீதி அடைய தேவையில்லை. இது வழக்கமான மருத்துவ நடைமுறைதான். இது தவிர கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக 15 மண்டலங்களில் 23 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 140 பாதுகாப்பு உடைகள், 1640 முகக்கவசங்கள் கையிருப்பில் உள்ளன. சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையில் ராயபுரம் மண்டலம் முதல் இடத்தில் உள்ளது.

சென்னை மாநகராட்சி தற்போது முக்கியமான கால கட்டத்தில் உள்ளது. டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்களுடைய தகவல்களை திரட்டி வருகிறோம்.

பீனிக்ஸ் வணிக வளாகத்துக்குள் சென்று வந்தவர்களை ஆய்வு செய்ததில் யாருக்கும் கொரோனா அறிகுறிகள் கண்டறியப்படவில்லை.

சென்னை மாநகராட்சி தயாரித்த கொரோனா தொடர்பான செயலியை 1 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். பொதுமக்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து செயலியை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News