செய்திகள்
குழந்தை

தஞ்சையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்தது

Published On 2020-04-08 08:37 GMT   |   Update On 2020-04-08 08:37 GMT
தஞ்சையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து தாயும்,சேயும் தனிவார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தை சேர்ந்த 4 பேருக்கும், மேலத்திருப்பூந்துருத்தி, அதிராம்பட்டினத்தை சேர்ந்த தலா ஒருவருக்கும், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த 2 பேருக்கும் என மொத்தம் 8 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் டெல்லி மாநாட்டில் பங்கேற்று தஞ்சை மாவட்டத்துக்கு திரும்பிய இந்தோனேஷியா, வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள், தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்களும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இவர்களுக்கு ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டு திருவாரூர் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் டெல்லி சென்று வந்தவர்கள் 2 பேர் உள்பட 3 பேருக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதில் ஒருவர் அதிராம்பட்டினத்தையும், ஒருவர் அம்மாபேட்டையையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இன்னொருவர் 32 வயதான பெண். இவர் தஞ்சையை சேர்ந்தவர். இவருடைய மாமனார் தஞ்சை மாநாட்டுக்கு சென்று வந்தவர் ஆவார். இவர்கள் 2 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர். இவர்கள் 2 பேருக்கும் ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் மாமனாருக்கு பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை. இந்தநிலையில் மருமகளுக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்த பெண்ணுக்கு நேற்று மதியம் தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும், குழந்தையும் தனிவார்டில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News