செய்திகள்
கொரோனா வைரஸ்

காயல்பட்டினம் அரசு டாக்டரை அழைத்து வந்த 9 பேருக்கு மருத்துவ பரிசோதனை

Published On 2020-04-08 08:02 GMT   |   Update On 2020-04-08 08:02 GMT
காயல்பட்டினம் அரசு டாக்டரை அழைத்து வந்த கார் டிரைவர் உள்பட மேலும் 9 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஆறுமுகநேரி:

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களில் காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரி மருத்துவர் மற்றும் அவரது நண்பரும் அடங்குவர். அவர்களது குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

அவர்களது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களை கணக்கெடுத்து, அவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேட்மாநகரம் பகுதியில் கொரோனா பாதித்த நபருடன் காயல்பட்டினத்தை சேர்ந்த 13 பேர் ஒரு வாகனத்தில் பயணம் செய்தது சுகாதார துறையினர் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் 3 பேர் தாமாகவே முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். மேலும் 10 பேர் மருத்துவ பரிசோதனைக்கு முன்வரவில்லை. இதனால் அவர்கள் யார்? என்று சுகாதார துறையினர் கண்டுபிடித்தனர்.

அவர்கள் ஆஸ்பத்திரிக்கு வர முன்வராததால் மருத்துவ குழுவினர் அவர்களது இல்லத்திற்கே நேரடியாக சென்றனர். அந்த 10 பேரில் 2 குழந்தைகளும் அடங்குவர். அவர்களை தவிர மீதமுள்ள 8 பேரின் ரத்த மாதிரியை பரிசோதனைக்கு எடுத்துக்கொண்டனர். மேலும் அவர்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல் கொரோனா பாதித்த காயல்பட்டினம் அரசு மருத்தவரை மதுரை விமான நிலையத்தில் இருந்து காயல்பட்டினம் கார் டிரைவர் ஒருவர் அழைத்து வந்துள்ளார். அந்த நபரையும் சுகாதார துறையினர் கண்டுபிடித்து அவரது ரத்தமாதிரியை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News