செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

விதிமுறைப்படி செய்ததை குறைகூறுகிறார்- மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி

Published On 2020-04-08 03:26 GMT   |   Update On 2020-04-08 03:26 GMT
அரவக்குறிச்சி எம்எல்ஏ ஒதுக்கிய நிதி விஷயத்தில் விதிமுறைப்படி செய்ததை மு.க.ஸ்டாலின் குறை கூறுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை:

அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த நிதி ஒதுக்கீட்டை மாவட்ட நிர்வாகம் ஏற்க மறுத்தது. அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும்தான் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டது..

நிதியை ஏற்க மறுத்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்  தெரிவித்தார். ‘கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அவரது தொகுதி மக்கள், அங்குதான் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிதி ஒதுக்கீட்டை முதலில் ஏற்றுக் கொண்ட நிர்வாகம் பின்னர் மறுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. உயிர்காக்கும் நேரத்திலும் அரசியல் சூழ்ச்சிகளில் அ.தி.மு.க. அரசு செயல்படுவது சரியல்ல. முறையான அனுமதி வழங்கி மக்களைக் காக்குமாறு முதல்-அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்’ என ஸ்டாலின் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார். 



‘அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்பாலாஜி, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒதுக்கிய நிதியை முதலில் ஏற்றுக்கொண்ட நிர்வாகம் பின்னர் மறுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அரசியல் சூழ்ச்சி செய்ய இது நேரமன்று. முதலமைச்சர் கவனிக்கவும்!’ என முதலமைச்சரை டேக் செய்து டுவிட்டரிலும் பதிவிட்டிருந்தார்.

இதனைக் கவனித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். 

‘சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி வழிமுறைகள்படி, சம்பந்தப்பட்ட தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்தான், சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைப்படி வரையறுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு அந்நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். இதை அறியாமல், விதிமுறைப்படி செய்ததை மு.க.ஸ்டாலின் அவர்கள் குறைகூறுகிறார்.

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மாவட்ட, மாநில அளவில் மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்கள், மருந்துகள் வாங்கவும், தடுப்பு நடவடிக்கைகளுக்கும், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.1கோடியை மாநில அளவில் ஒருங்கிணைத்து பயன்படுத்தி கொள்ள உத்தரவிட்டுள்ளேன்’ என எடப்பாடி பழனிசாமி டுவீட் செய்துள்ளார்.

அதன்பின்னர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி ஒதுக்கிய நிதியை மார்ச் 28ல் ஏற்று, 31 அன்று ஆட்சியர் மறுத்ததில் அரசியல் குறுக்கீடு இருப்பது எளிதில் புரியும்! பிரச்சினையை வளர்க்க விரும்பவில்லை. எந்த நிதியிலிருந்து என்பதைவிட கரூருக்கு வென்டிலேட்டர் வேண்டும் என்பதே முக்கியம். முதலமைச்சர் உறுதி செய்க’ என கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News