செய்திகள்
அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரை மேற்கு தொகுதியில் வசிக்கும் 60 ஆயிரம் பேருக்கு முகக்கவசங்கள் அமைச்சர் செல்லூர்ராஜூ வழங்கினார்

Published On 2020-04-07 08:08 GMT   |   Update On 2020-04-07 08:08 GMT
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 60 ஆயிரம் பேருக்கு முகக் கவசத்தை அமைச்சர் செல்லூர் ராஜு அ.தி.மு.க. நிர்வாகிகள் மூலம் வழங்கினார்.

மதுரை:

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சேவை அமைப்புகளும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 60 ஆயிரம் பேருக்கு முகக் கவசத்தை அமைச்சர் செல்லூர் ராஜு அ.தி.மு.க. நிர்வாகிகள் மூலம் வழங்கினார்.

இதற்கான நிகழ்ச்சி மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகள் மற்றும் பரவை பேரூராட்சிக்குட்பட்ட கிராமப் பகுதிகளுக்கு அந்தந்த பகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் முகக்கவசங்களை பொது மக்களுக்கு வழங்கும் வகையில் ஒப்படைத்தார்.

பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியின் பொதுமக்களை கொரோனா தாக்கத்திலிருந்து பாதுகாக்க வசதியாக முதல் கட்டமாக 60 ஆயிரம் முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கட்சி நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கியுள்ளனர்.

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காய்கறி வாங்குவதற்கு வெளியில் வரும்போது கூட மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. இதனால்தான் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை ஏழை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மக்களை சட்டத் தின் மூலம் கட்டுப்படுத்துவது என்பது கஷ்டம். எனவே மக்கள் தாங்களாகவே தனிமை படுத்திக்கொண்டு கொடுமையான நோயிலிருந்து அனைவரையும் காப்பாற்ற ஒத்துழைக்க வேண்டும்.

பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் மக்கள் தீபமேற்றினர். இதில் எந்தவிதமான அரசியலும் மத சார்பும் இல்லை. நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் இருக்கிறோம் என்பதை வெளிக்காட்டுவதற்காகவே இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது.

இளைஞர்கள் பட்டாசுகளை வெடித்தும் தங்கள் ஒற்றுமையை வெளிக்காட்டினர். உலக வல்லரசான அமெரிக்காவே கொரோனாவால் நடுங்கி வருகிறது. தினமும் அங்கு ஏராளமானோர் பலியாகி வருகிறார்கள். எனவே 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா எப்போதும் ஒற்றுமையாக இருக்கிறது என்பதை இந்த கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News