செய்திகள்
கொரோனா சிகிச்சை பணியில் மருத்துவர்கள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் டாக்டர் உள்பட 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் - 68 பேருக்கு தீவிர சிகிச்சை

Published On 2020-04-07 07:58 GMT   |   Update On 2020-04-07 07:58 GMT
கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கோவை பெண் டாக்டர் உள்பட 5 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பினர்.

கோவை:

கோவை இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரியில் கோவை கல்லூரி மாணவி உள்பட 58 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதுதவிர திருப்பூரை சேர்ந்த 3 பேர், நீலகிரியை சேர்ந்த 4 பேர், ஈரோட்டை சேர்ந்த 4 பேர் என மொத்தம் 69 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதற்கிடையே கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கோவை கல்லூரி மாணவி, பெண் டாக்டர், அவரது 10 மாத குழந்தை, வீட்டு வேலைக்கார பெண், திருப்பூர் தொழில் அதிபர் ஆகிய 5 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பினர்.

அவர்களை 28 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்குமாறு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று கோவை போத்தனூரை சேர்ந்த 54 வயதுடைய ரெயில்வே பொறியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் ஒரு மாதத்திற்கு முன்பு துபாய் சென்று திரும்பியது தெரியவந்தது. இவர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


இதனால் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்தது.

திருப்பூரிலும் நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே அவர்கள் வசித்த பகுதிகளான பெரிய தோட்டம், சிக்கண்ணா நகர், சுகுமார் நகர் உள்ளிட்ட பகுதிகளை மாநகராட்சி அதிகாரிகள் தடுப்புகள் வைத்து அடைத்துள்ளனர். அந்த பகுதிகளில் உள்ள வீடுகள் தோறும் வேறு யாருக்கேனும் அறிகுறி உள்ளதா? என்பதை மாநகராட்சி நகர் நல அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தற்போது வரை கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கோவையை சேர்ந்த 58 பேர், திருப்பூரை சேர்ந்த 6 பேர், நீலகிரியை சேர்ந்த 4 பேர் என மொத்தம் 68 பேர் கொரோனாவுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகளை சுற்றியுள்ள 5 கி.மீ. தூரம் கட்டுப்படுத்துதல் மண்டலத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதில் தற்போது கோவை உக்கடம், கரும்புக்கடை, குனியமுத்தூர், மதுக்கரை, போத்தனூர், பொள்ளாச்சி, ஆனைமலை, மேட்டுப்பாளையம், சாய்பாபா காலனி, அன்னூர் உள்ளிட்ட 10 இடங்கள் கொண்டு வரப்பட்டு அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் செவலியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுதவிர மாநகராட்சி சார்பில் தீயணைப்பு வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவை மாவட்டத்தில் டெல்லி சென்று திரும்பியவர்களில் 56 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த 230 பேர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News