செய்திகள்
கோப்புபடம்

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 2 ஆயிரத்து 500 ரெயில் பெட்டி வார்டுகள் தயார் - ரெயில்வே அறிவிப்பு

Published On 2020-04-07 02:38 GMT   |   Update On 2020-04-07 02:38 GMT
கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரெயில் பெட்டிகளை ‘வார்டு’களாக மாற்ற தொடங்கப்பட்ட பணியில் 2 ஆயிரத்து 500 வார்டுகள் தயார் நிலையில் உள்ளது என இந்தியன் ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை:

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, நாட்டின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் இந்தியன் ரெயில்வே தன்னிடம் உள்ள வசதிகளை பயன்படுத்த முன்வந்து, ரெயில் பெட்டிகளை வார்டுகளாக மாற்ற திட்டமிட்டது.

அதன்படி 3.2 லட்சம் படுக்கைகளுடன் 20 ஆயிரம் ரெயில் பெட்டிகளை வார்டுகளாக மாற்ற முடிவு செய்தது. முதற்கட்டமாக 5 ஆயிரம் ரெயில் பெட்டிகளை தனிமைப்படுத்தல் வார்டுகளாக மாற்ற இலக்கு நிர்ணயித்து, அந்த இலக்கில் பாதியான 2 ஆயிரத்து 500 ரெயில் பெட்டிகளை குறுகிய கால அவகாசத்தில் மாற்றி ரெயில்வே நிர்வாகம் சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து இந்தியன் ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக மனிதவள ஆதாரம் குறைவாக காணப்படுகிறது. இதனால் சுழற்சிமுறை அடிப்படையில் தொழிலாளர்கள் வேலை பார்க்க வேண்டிய நிலை உள்ளது.

இந்தநிலையில் ரெயில்வேயின் பல்வேறு மண்டலங்களும், குறுகிய கால அவகாசத்தில், ரெயில் பெட்டிகளில் நிறைய மாற்றங்கள் செய்து ‘வார்டு’களாக மாற்றி அசாத்தியமான பணிகளை செய்து முடித்துள்ளன.

2 ஆயிரத்து 500 ரெயில் பெட்டிகள் தனிமைப்படுத்தல் ‘வார்டு’களாக மாற்றி, அதில் அவசர நேரத்தில் பயன்படுத்த 40 ஆயிரம் தனிமைப்படுத்தல் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.

முதலில் வடிவமைக்கப்பட்ட ‘மாதிரி வடிவமைப்பு’க்கு ஒப்புதல் கிடைத்ததும், பெட்டிகளை ‘வார்டு’களாக மாற்றங்கள் செய்யும் பணிகளை மண்டல ரெயில்வே நிர்வாகங்கள் தொடங்கின.

சராசரியாக நாள் ஒன்றுக்கு 375 பெட்டிகளில் இந்த மாற்றங்கள் செய்து முடிக்கப்படுகின்றன. நாட்டில் 133 இடங்களில் இந்தப் பணிகள் நடந்து வருகின்றது. மருத்துவத்துறை அறிவுறுத்தல்களின்படியே அனைத்து ரெயில் பெட்டிகளிலும் சிகிச்சை அளிப்பதற்கான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அவசர கால தேவைகளுக் காக மட்டுமே இந்த ரெயில்வே தனிமைப்படுத்தல் பெட்டிகள் மாற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னை கோட்டத்தில் 65 ரெயில் பெட்டிகள் ‘வார்டு’களாக மாற்றப்பட்டு இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News