செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? - எடப்பாடி பழனிசாமி பதில்

Published On 2020-04-07 01:54 GMT   |   Update On 2020-04-07 01:54 GMT
வருகிற 14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? என்பதற்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
சென்னை:

1 லட்சம் கொரோனா நோய் பரிசோதனை கருவிகள் விரைவில் கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வருகிற 14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? என்பதற்கும் பதில் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட கலெக் டர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், நிருபர்களுக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்றைய தினம் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலேயும் இந்த வைரசினுடைய வீரியம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் வைரஸ் தொற்றை தடுப்பதற்கு உண்டான பணிகளில் முழு மூச்சுடன் அரசு ஈடுபட்டிருக்கின்றது.

மாவட்ட கலெக்டர்கள் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு அது பரவாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் விமான நிலையங்களில் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 10 ஆயிரத்து 538. மேற்கண்ட பயணிகளில் வீட்டு கண்காணிப்பில் இருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 541. அதில் 28 நாட்கள் கண்காணிப்பு நிறைவு பெற்ற பயணிகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 814.

மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெறப்பட்டவுடன், கூடுதலாக 21 ஆய்வகங்களையும் சேர்த்து 38 ஆய்வகங்கள் செயல்படக்கூடிய சூழ்நிலை வருகின்றபொழுது, வேகமாக, துரிதமாக பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதுவரை, ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,612. இதில் இன்றுவரை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 571. கொரோனா வைரஸ் என சந்தேகப்பட்டு, உள்நோயாளியாக தனிப் பிரிவில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,848. இன்றைக்கு மருத்துவமனையை பொறுத்தவரை, நமக்குத் தேவையான அளவிற்கு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய அளவிற்கு 22,049 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கின்றன.

முக கவசங்கள், உடல் பாதுகாப்பு உடைகள், என்-95 கவசங்கள் ஆகியவை போதிய அளவு கையிருப்பில் உள்ளன. 2,500 வெண்டிலேட்டர்கள் வாங்க கொள்முதல் ஆணை இன்றைக்கு வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான மருந்துகள் தேவையான அளவிற்கு முழுமையாக கையிருப்பில் உள்ளன. 1 லட்சம் துரித ஆய்வு உபகரணங்கள் கொள்முதல் செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது இந்த ரேபிட் டெஸ்ட் கிட் கிடைத்தவுடன் விரைவாக, வேகமாக 1 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய முடியும். வருகிற 9-ந்தேதி அந்த ரேபிட் டெஸ்ட் கிட் கிடைக்கும். இதனை சீனாவில் இருந்து நாம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறோம். 9-ந்தேதி கிடைத்தவுடன் 10-ந்தேதி எங்கெங்கெல்லாம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமோ எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனை விரைவாக செய்வதற்கு உதவும்.

பிற மாநில முகாம்களில் உள்ள தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களின் எண்ணிக்கை 7,326. அவர்களுக்கு தேவையான வசதிகள் நம் அரசால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் கூறியதாது:-

மத்திய அரசு முதல்கட்டமாக ரூ.500 கோடி எஸ்.டி.ஆர்.எப்.புக்கு கொடுத்திருக்கிறார்கள். படிப்படியாக நிதி கொடுப்பதாக சொல்லியிருக் கிறார்கள். சீனாவில் இருந்து பொருட்கள் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசிடம் போதுமான நிதி இருக்கிறது.

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்று கேட்கிறீர்கள். வைரசினுடைய தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதை தடுப்பதற்கு ஒரே வழி நம்மை நாம் தனிமைப்படுத்திக் கொள்வதுதான். இந்த வைரஸ் பரவாமல் தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இந்த வைரஸ் எளிதாக பரவக்கூடியது, இந்த வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதை ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்கள், தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகள் வாயிலாக மக்களுக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றீர்கள். அதற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தில் 7 பேர் குணமாகி வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், இன்றைய தினம் இந்த வைரஸ் தொற்றின் அறிகுறி தென்படாமலேயே அவர்கள் உடலில், இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு விடுகிறது. சமீபத்தில் பரிசோதனை செய்ததில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டவை இவை. அரசு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

தடை உத்தரவை கடுமையாக்குவதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என கேட்கிறீர்கள். அரசாங்கம், மக்களையும் கஷ்டப்படுத்தக் கூடாது, அவர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது. அதே நேரத்தில், இந்த வைரஸ் பரவாமல் தடுக்கப்பட வேண்டும். மக்களை கஷ்டப்படுத்தி, துன்புறுத்தி இந்த தடை உத்தரவை அமல்படுத்துவது என்பது இயலாத காரியம். சட்டத்தை நாம் போடலாம், ஆனால் அதை நடைமுறைப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு வேண்டும்.

டெல்லி மாநாட்டிற்கு யார்-யாரெல்லாம் சென்றார்கள் என்று எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர்கள் எல்லாம் பரிசோதனை செய்யப்பட்டு, யார்-யாருக்கு பாசிட்டிவ் இருக்கிறதோ, அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உரிய சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் யாராவது விடுபட்டிருந்தால், தாங்களாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று நாங்கள் ஏற்கனவே அழைப்பு விடுத்திருக்கிறோம்.

யாரும் நோயை வரவழைப்பதும் கிடையாது. ஆனால் நோய் வந்துவிட்டால் குணப்படுத்துவது அரசின் கடமை. ஏனென்றால், ஒவ்வொருவருடைய உயிரும் மிக முக்கியம்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
Tags:    

Similar News