செய்திகள்
‘பிரட்’ வைக்கப்பட்டு உள்ளதையும், ஒருவர் பணத்தை பெட்டியில் போட்டு விட்டு பிரட்டை எடுப்பதையும் படத்தில் காணலாம்.

ஊழியர்கள் இல்லாத கடையில் ‘பிரட்’ விற்பனை அமோகம்- சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிகிறது

Published On 2020-04-04 06:15 GMT   |   Update On 2020-04-04 06:15 GMT
கோவையில் ஊழியர்கள் யாரும் இல்லாமல் கடை முன்பு வைத்து ‘பிரட்’டுகளை பொதுமக்கள் அதற்குரிய பணத்தை போட்டுவிட்டு எடுத்து செல்கிறார்கள். கோவை மக்களின் நேர்மைக்கும், கடை உரிமையாளரின் நம்பிக்கைக்கும் சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிகிறது.
கோவை:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும்படியும், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசின் உத்தரவை பொதுமக்கள் பின்பற்றி, சமூகவிலகலை கடைபிடித்து வருகிறார்கள்.

கொடிய நோயான கொரோனாவால் பல பாதிப்புகள் இருந்தாலும், பொதுமக்களிடம் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது மனித நேயம், தன்னம்பிக்கை, நேர்மை உள்ளிட்ட பண்புகள் மக்களிடம் ஏற்கனவே இருந்தாலும் தற்போது அது கூடுதலாக வெளிப்பட்டு வருகிறது.

இதற்கு உதாரணமாக கோவையில் இனிப்புக்கடை ஒன்று செயல்படுத்திவரும் வித்தியாசமான முறை சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

கோவை ரத்தினபுரியில் உள்ள மேம்பாலம் அருகே இருக்கும் இனிப்புக்கடை ஒன்று ஊரடங்கு உத்தரவு காரணமாக மூடப்பட்டு உள்ளது. இருப்பினும் அந்த கடை நிர்வாகத்தினர், பொதுமக்களுக்கு ‘பிரட்’ கிடைப்பதற்காக தங்களது கடை முன்பு மேஜை ஒன்றில் ‘பிரட்’ பாக்கெட்டுகளை அடுக்கி வைத்துள்ளனர். ஆனால் விற்பனை செய்ய ஆட்கள் யாரும் இல்லை. அதற்கு பதில் ‘பிரட்’ வைத்துள்ள பெட்டியின் அருகில் ஒரு அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர். அதில், இங்கு வைக்கப்பட்டு இருக்கும் ‘பிரட்’டின் விலை ரூ.30 ஆகும். தேவையான அளவுக்கு ‘பிரட்’டுகளை எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை அருகில் உள்ள பெட்டியில் போடவும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அந்த பகுதியில் உள்ளவர்கள் அந்த கடைக்கு வந்து அங்கு ‘பிரட்’டுகளை எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை அருகில் உள்ள பெட்டியில் போட்டுவிட்டு செல்கிறார்கள். இதுகுறித்து அந்த இனிப்பு கடையின் உரிமையாளர் கூறியதாவது:-

ஊரடங்கு உத்தரவு காரணமாக பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் ‘பிரட்’ தடையின்றி கிடைக்க இதுபோன்ற ஏற்பாடுகளை செய்து உள்ளோம். அங்கு விற்பனைக்கு ஊழியர்கள் இல்லை. வெளிநாட்டில் இருப்பதுபோன்று தேவையான அளவுக்கு ‘பிரட்’டுகளை எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை பெட்டியில் போட்டுவிட்டு செல்கிறார்கள்.

கடந்த 5 நாட்களுக்கும் மேலாக இதுபோன்று வைத்து உள்ளோம். 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. யாரும் ‘பிரட்’டுகளை திருடுவது இல்லை. ‘பிரட்’டுகள் தீர்ந்துவிட்டால் தேவையான அளவுக்கு கொண்டு வைக்கிறோம். இதுபோன்று பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் விற்பனை செய்ய முடிவு செய்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பான வீடியோ வாட்ஸ் அப்பில் பரவியதால், அதைப்பார்த்த பல்வேறு தரப்பினர் நேர்மைக்கு இலக்கணமாக திகழும் கோவை மக்களுக்கும், கடை உரிமையாளரின் நம்பிக்கைக்கும் சமூகவலைதளங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News