செய்திகள்
கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காக அறிமுகப் படுத்தப்பட்டுள்ள ரோபோ.

சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு உதவ 3 ரோபோக்கள்

Published On 2020-04-04 05:16 GMT   |   Update On 2020-04-04 05:16 GMT
சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவ 3 ரோபோக்களை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிமுகம் செய்து வைத்தார்.
பெரம்பூர்:

கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ள நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், பணியாளர்களுக்கு உதவிட 3 ரோபோக்களை தனியார் நிறுவனம் தயாரித்து வழங்கி உள்ளது.

இந்த ரோபோக்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று அறிமுகம் செய்து பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.

அப்போது ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜி, மருத்துவமனை நிலைய அதிகாரி ரமேஷ் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு 500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. அதில் 100 படுக்கைகள் வெண்டிலேட்டர் வசதி கொண்டவை. ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் மட்டும் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் 48 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது முதல்கட்டமாக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளுக்கு உதவிடும் வகையில் 3 ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த ரோபோக்களை பயிற்சி பெற்ற செவிலியர்களே இயக்குவார்கள். ஆஸ்பத்திரியின் தேவைக்கேற்ப ரோபோக்களின் இயக்கம் அதிகப்படுத்தப்படும்.

தனியார் நிறுவனம் மூலம் இந்த ரோபோக்கள் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல் திருச்சிக்கு 5 ரோபோக்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ரோபோக்கள் மூலம் கொரோனா வைரஸ் சிறப்பு வார்டுகளில் பணியாற்றும் டாக்டர்கள் , மருத்துவ பணியாளர்கள் மற்றும் அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான உணவு, குடிநீர், மருந்து, மாத்திரை உள்ளிட்டவைகளை வெளியில் இருந்து சிறப்பு வார்டுக்கு உள்ளே எடுத்து செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த ரோபோக்கள் 250 மீட்டர் முதல் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் திறன் கொண்டவை ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News